தப்பினார் உதயங்க வீரதுங்க! இலங்கைக்கு காத்திருந்த ஏமாற்றம்...

Report Print Dias Dias in இலங்கை

சர்வதேச காவல்துறையின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச குற்றச்சாட்டின்மை மற்றும் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படாமை உறுதி செய்யப்பட்டதால் தன்னை சர்வதேச காவல்துறை விடுவித்ததாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அமெரிக்கா நோக்கி பயணிக்கிவிருந்த நிலையில் சர்வதேச காவல்துறையினரால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு காவல்துறை குழுவொன்று டுபாய் பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிக் வானூர்தி கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக காவல்துறை நிதிமோசடி விசாரண பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை நினைவு கூறத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

சர்வதேச பொலிஸார் தன்னை விடுதலை செய்துள்ளதாகவும் தன்னால் இலங்கைக்கு வர முடியாது எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்க, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது, கடந்த 4 ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் சர்வதேச பொலிஸாரினால், தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சர்வதேச ரீதியான எந்த குற்றச்சாட்டு மற்றும் இண்டர்போல் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்பட்டதாக உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் இன்றைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் கடுமையான அரசியல் பழிவாங்கல் காரணமாக, தற்போதைக்கு இலங்கைக்கு வர உத்தேசமில்லை எனவும் தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள் - ஸ்டீபன்