மட்டக்களப்பை உலுக்கிய மூன்று சடலங்கள்

Report Print Dias Dias in இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்களை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் 18 வயதுடைய ரவி சார்த்திகா என்பவரையும் ஏறாவூர் பகுதியில் தளவாய், புன்கைகுடா வீதியைச் சேர்ந்த 83 வயதுடைய முத்தையா சிதம்பரம் என்பவரையும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நல்லதம்பி கனகசபை என்பவரையுமே பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்சியாக மட்டக்களப்பு பகுதியில் தற்கொலைகள் காரணம் இன்றி இடம்பெற்று வருகின்றமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேவேளை கடந்த சில காலமாகவே கிழக்கு மாகாணத்தில் நுண்கடன் பிரச்சினைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

அதிலும் இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் இளம் குடும்பஸ்தர்கள் மற்றும் இளம் குடும்பப் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் தமது குழந்தைகளையும் பலியாக்கும் பெரும்பாலான சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறான பிரச்சினைகளால் பல உயிர்கள் பறிபோயுள்ள போதும் எந்த வித தீர்வும் எடுக்கப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமே.