யாழில் மிகப்பெரும் காகித ஆலை உதயம்!

Report Print Thayalan Thayalan in இலங்கை

யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்றாவதும் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இரண்டாவதுமான காகித உற்பத்தித் தொழிற்சாலையாக இந்த ஆலை உதயமாகியுள்ளது.

இந்த நிகழ்வில், USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ராதையன் ஆகியோர் காகித ஆலையினைத் திறந்துவைத்தனர்.

நிகழ்வின் விருந்தினர்களாக USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன், லான்ட் ஓ லீக்ஸ் அமைப்பின் சார்பில் மைக்கேல் பார், ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் நிறுவன முதல்வர் கந்தையா பாஸ்கரன் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு காகித ஆலையின் இயந்திரப் பகுதிகள் சுற்றிக் காட்டப்பட்டன.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் நிறுவன முதல்வர் கந்தையா பாஸ்கரன், யுத்தத்தால் துவண்டுபோயுள்ள தாயக மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவருவதே தமது நோக்கம் எனவும், இதற்கு அனைத்து புலம்பெயர் சக்திகளும் தயாராகவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

மேலும் எமது தாயகப் பிரதேசத்தில் ஏராளமான வளங்கள் இருப்பதாகவும் அவை வெளிச் சக்திகளால் சுரண்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அந்த வளங்களைக்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக இதுபோன்ற பல தொழிற்சாலைகள் தாயகத்தில் உருவாக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த போர்க் காலப் பகுதியில் காகிதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக தமிழரின் எழுத்துரிமை மறுக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் பத்திரிகைகளில் செய்திகளைக் கொண்டுவருவதற்கு கடினமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருந்ததாகவும் இதன்போது கருத்துரைத்த ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையின் மிகப்பெரிய காகித உற்பத்தி ஆலையாக இருந்த வாழைச்சேனை காகித உற்பத்தி ஆலை, கடந்த போர்க் காலத்தில் பாதிக்கப்பட்டு முற்றாகச் செயலிழந்தது. மூவாயிரம் பேர் வரையில் வாழைச்சேனை காகித உற்பத்தி ஆலையில் பணியாற்றியிருந்தனர்.

அதேவேளை இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காகித உற்பத்தி ஆலை வாழைச்சேனை காகித ஆலையுடன் கூட்டுறவு அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தாலும் வாழைச்சேனை காகித ஆலையின் வீழ்ச்சியுடன் அதுவும் செயலிழந்துபோனது.

இதனால் எம்பிலிப்பிட்டிய ஆலை கழிவுக் கடதாசிகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் ஆலையாக மாற்றியமைக்கப்பட்டது. ஆனாலும் நிதிப் பற்றாக்குறை மற்றும் அனுபவமிக்க தொழிலாளர் இன்மையால் எம்பிலிப்பிட்டிய காகித ஆலையும் செயலிழந்துபோனது.

இவ்விரு காகித ஆலைகளும் செயலிழந்ததைத்தொடர்ந்து நாட்டின் காகிதத் தேவைக்காக இன்றுவரை வெளிநாடுகளிலிருந்தே மிகப்பெரும் செலவில் காகிதங்கள் இறக்குமதிசெய்யப்பட்டுவருகின்றன.

தற்பொழுது இலங்கையின் ஒரேயொரு பாரிய காகித தொழிற்சாலையாக அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை விளங்கினாலும், இதன்மூலம் நாட்டின் நான்கு சதவீத காகித தேவையினையே பூர்த்தி செய்யமுடியும் என கணிக்கப்பட்டுள்ளது.