கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Report Print Yathu in இலங்கை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று கரைச்சி பிரதேச சபையில் விசேட அமர்வில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் காலை ஒன்பது முப்பது மணிக்கு சமர்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் ஒரு மணி முப்பது நிமிடங்கள் வரை இடம்பெற்றது.

பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது தவிசாளர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பதினொரு பேரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும் என பதினான்கு பேரும் எதிராக வாக்களித்தனர்.

இதனால் மேலதிக நான்கு வாக்குகளால் 2019 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கரைச்சி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெடிகுண்டு இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பே ஏற்படும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர் தா. மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில் பிரதேசத்தினதும், மக்களினதும் நலன்சார்ந்த பல விடயங்கள்புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தவிசாளர் சபையில் பேசுவது ஒன்று நடைமுறையில் செய்வது ஒன்று, சபையின் செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்தும் எல்லா உறுப்பினர்களையும், எல்லா வட்டாரங்களை சமமாகவும், ஒரே மாதிரியும் நோக்காது தனது கட்சி அரசியலை பலப்படுத்துவதனை நோக்காக கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அவ்வாறே இந்த வரவு செலவு திட்டத்திலும் பல குறைப்பாடுகள் உண்டு.

சபையில் உள்ள எதிர்தரப்பு உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டிய கோரிக்கை விடுத்த விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசமும் இங்கு வாழ்கின்ற மக்களும் ஏராளமான தேவைகளுடன் காணப்படுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டம் அந்த தேவைகளில் ஒரு பகுதியேனும் அடுத்த ஆண்டுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு காணப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை.

அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச வருமான நிதி மூலங்கள் தொடர்பில் குழப்பங்கள் காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வரி வருமான மிக குறைந்தளவு காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதனால் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers