இலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களது அரசியல் விடுதலை போராட்டம் என்பது, ஏறக்குறைய ஏழு தசாப்தங்களிற்கு மேலானது. இதில் விட்டு கொடுப்பு, காலம் கடத்தல், ஏமாற்றங்கள், துரோகங்கள், போன்றவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் தமிழீ மக்களது அரசியல் தீர்விற்கு சிங்கள பௌத்த அரசுகள் ஓர் நேர்மையான உண்மையான நிரந்தரமான தீர்வை கொடுப்பதற்கு எண்ணியுள்ளார்களா? முயற்சித்துள்ளார்களா? ஒன்றுபட்டுள்ளார்களா? முன்வந்துள்ளார்களா? என்பதை நாம் பொது அறிவின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு சில அரைகுறை தமிழ் அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் மிகவும் சிரிப்பிற்கு இடமானது.
இலங்கைதீவின் சரித்திரத்தை நன்கு படித்து அறிந்த சர்வதேச நாடுகளிடமோ அல்லது விதண்டாவாதம் பேசாத ஒருவரிடம், இலங்கைதீவில் தமிழர்களிற்கான அரசியல் தீர்வு ஏதற்காக கடந்த ஏழு தசாப்பதங்களாகியும் தீர்க்கபடவில்லை என்பதை நாம் வினாவினால் - இதற்கு அவர்கள், சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள், பௌத்த குருமார்களை குற்றம் சாட்டுவதை நாம் காணுகிறோம்.
ஆனால் மிக அண்மை காலமாக, தமிழீழ மக்களது சரித்திரத்தை தமது பிழைப்பிற்கு அரைகுறையாக படித்த அறிந்த சில விதண்டாவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், “பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம் கொண்டவர்கள் போல்” புதிய சரித்திரமும் புதிய கண்டு பிடிப்புகளை தமக்கு கிடைக்கும் அர்ப்ப சொர்ப்ப மேடைகளில் ‘கிணற்று தவழைகள்’ போல் புலம்புகிறார்கள்.
‘தட்டி கேட்க ஆள் இல்லையானால் தம்பி சங்க பிரசங்கம்’ என்பார்கள். உண்மையை கூறுவதனால், தட்டி கேட்க ஆள் இல்லை என்பது உண்மையல்லா! தட்டி கேட்பவரது எதிர்காலம் என்னவாகும் என்ற அடிப்படையில் சிலர் அல்ல பலர் மௌனமாகவுள்ளார்கள் என்பதே உண்மை.
விடயத்திற்கு வருகிறேன்! தமிழீழ விடுதலை புலிகளின் எச்சமான தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதிநிதித்துவ படுத்தி, தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள், தம்மை ஓர் உண்மைவாதியாக சிங்கள பௌத்தவாதிகளிற்கு காண்பிப்பதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் பற்றி மிக ஆபாண்டமாக விமர்ச்சிப்பது, பேசுவது அவர்களது பேச்சு சுதந்திரம் என்பதை, என்னை போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மறுக்கவில்லை. ஆனால் இன்று தமிழீழ விடுதலை புலிகள் பற்றி உரையாற்றும் இவர்களிற்கு சிங்கள பௌத்தவாதிகள் தமிழீழ மக்களிற்கு கடந்த ஏழு தசப்தங்களாக மறுத்துவருவது மட்டுமல்லாத மிக மோசமாக மீறி வரும் மனித உரிமை, மனிதபிமான உரிமைகள், அரசியல், பொருளாதார உரிமைகள் இவர்களது அறிவிற்கு கண்ணுக்கு தெரிவதில்லையா?
இவர்கள் உண்மையாக தமிழீழ மக்களில் உணர்வு ரீதியாக அக்கறை கொண்டவர்களானால், 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் இவர்களது அரசியல் நிலைப்பாடு என்ன? அன்று புலி எதிர்ப்பு பேசி தங்களை தாக்கு பிடித்த – ரொலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அன்றும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளது ஆயுத போராட்ட காலத்திலும் அரசியல் பேசினார்கள் என்பது மட்டுமல்லாது, தாம் உண்மையில் தமிழீழ மக்களது அரசியல் உரிமைகளில் விசுவசமாக அக்கறை கொண்டவர்கள் என்பதையும் நிருபித்தார்கள்.
சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பதற்கு புதிய வரவிலக்கணம், புதிய விளக்கம் என்பதுடன், அரசியல் கொலைகள் என்னும் பொழுது, இவ் விகடகவிகளுக்கு - தமிழீழ விடுதலை புலிகளினால் செய்யப்பட்ட கொலைகள் தவிர்ந்த வேறு எந்த கொலை, ஆட்கடத்தல் இன அழிப்பு பற்றி கூறுவதற்கு உரையாற்றுவதற்கு இவர்களது குறுகியகால அரசியல் வாழ்க்கை அனுமதிப்பதில்லை போலும்.
யாதார்த்தம் என்ன?
முப்பது வருடங்களிற்கு மேலாக சாத்வீக போராட்டம் செய்து தோல்விக்கு மேல் தோல்வி கண்ட தமிழீழ மக்களிற்கு, இவர்கள் ‘மென்வலு அரசியல்’பற்றி விளக்கம் கொடுப்பது ‘விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின்னர் இரமர் சீதைக்கு என்ன முறை’ என்னபது தான் நினைவில் வருகிறது.
தாம் ஏற்கனவே தயார் செய்ததிற்கு அமைய, மேடைகளில் ஒருவர் ‘மென்வலு அரசியல்’பற்றி உரையாற்ற, மற்றவர் அதற்கு ‘சிஞ்சா’ போடுவதையும் - சுயநிர்ணய உரிமை என்பது ஒன்று தான் என கூறிவிட்டு, தொடர்ந்து உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி விளக்கம் கொடுப்பதும், தமிழீழ மக்களை இவர்கள் கேணையர்களாக எண்ணியுள்ளார்களா என எண்ண தோன்றுகிறது.
இங்கு ஓர் பழைய ஞாபகம் எனது மனதில் தோன்றுகிறது. சில வருடங்களிற்கு முனபு, பிரான்ஸில் ஓர் கூட்டத்தில் கலந்து கொண்டவேளையில், அங்கு உரையாற்றிய ஒருவர், கூறியதாவது, “சிங்கொங்கின் தத்துவதற்கு அமைய, உலகில் போராடும் இனங்கள் யாவும் கூடிய விரைவில் விடுதலை அடையப்போவதாக கூறினார்”. இது பலருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆகையால், உரை முடிந்தவுடன், அவ் நபரை நாடி, யார் இந்த சிங்கொங் எந்த நாட்டை சார்ந்தவரென வினாவிய வேளையில், அவர், சிரித்து கொண்டு அப்படி ஒரு நபர் இல்லையென்றும், மேடை பேச்சு வேளையில் இப்படியான தமசுக்கள் சகஜமென கூறினார். இது போன்றே - தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றிய விளக்கமும் தென்பட்டது. மேடை பேச்சு வேளையில் பலத்த பாதுகாகப்புகளுடன் உரையாற்றும் பேச்சாளரை யார் குழப்புவார்கள்?
தமிழர் தரபு அரசியல் தீர்விற்கான தவறவிட்ட சந்தர்ப்பங்களை தமிழர்களிற்கு எடுத்து கூறும் இவ் நபர்களிடம் ஓர் சிறு கேள்வி. 1977ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் ஒருமித்து தமிழீழத்திற்கு வாக்கு அழித்ததை நீங்கள் அறிந்துள்ளீர்களா? தமிழீழ மக்களை புண்படுத்து வகையில் விடயங்களை கூற துணிந்தவர், சிங்கள பௌத்தவாதிகளிடம் இது பற்றி எப்பொழுதாவுதல் உரையாடிதுண்டா?
சிங்களவர்களிற்கு நாட்டை பிரிக்க மாட்டோம் என்ற உறுதியை நாம் கொடுக்க வேண்டுமென கூறும் இவர்கள் - 1957 ம் ஆண்டு பண்ட செல்வா ஒப்பந்தம், அதனை தொடர்ந்த 1965ம ஆண்டு டட்லி செல்வ ஒப்பந்தம் போன்றவற்றை ஒருபட்சமாக சிங்கள பௌத்த தலைவர்களினால் கிழித்து ஏறியப்பட்டது இவர்களிற்கு ஞாபகம் உள்ளதா? அவ்வேளையில் நாட்டை பிரிப்பதற்கு எந்த ஆயத போராட்டம் நடந்தது? ஏன் இவற்றை சிங்கள பௌத்தவாதிகளிற்கு இவர்களால் கூற முடியாதுள்ளது?
யாதார்தம் என்னவெனில், சிங்கள பௌத்தவாதிகள் தமிழ் மக்களிற்கு எந்தவித அரசியல் தீர்வையும் முன் வைக்க போவதில்லை என்பதே உண்மை, யாதார்தம்.
தமிழ் மக்களின் வாக்குகளில் மாகாண சபைக்கும், பாரளுமன்றத்திற்கும் தெரிவான இவர்கள், சிங்கள பௌத்தவாதிகளை திருப்திபடுத்துவது தான் இவர்களது தலையாய கடமையா?
இவ் நபர்களின் ஏதேச்சையான உரைகளிற்கும், தமிழீழ மக்களை புண்படுத்தும் நடவடிக்கைகளிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் கட்சிகளை ஆரம்பித்தவர்களும், அவர்களிற்கு புலம்பெயர்வாழ் தேசத்திலிருந்து உசுப்பேற்றியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
ஐக்கியத்திற்காக தந்தை செல்வா, திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் வீடு சென்றது போல் - தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதல் பிரிவை ஏற்படுத்திய கஜன் பொன்னம்பலம், ஏதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகளை தேடி சென்று ஐக்கியத்தை உருவாக்க முடியாது?
உண்மையை கூறுவதனால் இன்று பத்து வீதமான தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே, தமது இனம, தமது நிலம், தமது அரசியல் போராட்டம் என்பதை சிந்திப்பவர்கள். மிகுதி நபர்கள் தமிழ் அரசியல் போராட்டம் என்பதை ஒரு பொழுதுபோக்காக தமது பொருளாதார லாபங்களிற்காக மேற்கொள்கிறார்கள் என்பதே உண்மை.
“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம் கொள்வது” போல் சன்னதம் கொள்பவர்கள், பூனையின் உண்மை தன்மையை அறிந்திருக்கவில்லை போலும்! ஓர் பூனையை அதனது நிரந்தர இருப்பிடத்திலிருந்து அகற்றி பல மைல்களிற்கு அப்பால் கொண்டு சென்று துரத்தினாலும், அப் பூனை திரும்ப தனது வழமையான இடத்திற்கு வந்தே தீரும் என்பதே யாதார்தம்.
சிறிலங்காவின் ஜனநாயத்தை காப்பாற்றுவதாக கூறுபவர்களிடம் கேட்கபட வேண்டிய கேள்வி என்னவெனில் - இலங்கைதீவில் ஜனநாயகம் இருந்திருந்தால்; இவ்வளவு பெரும் தொகையான தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள, முஸ்லீம் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா? ஆகையால் ஜனநாயம் என்றால் என்ன எப்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று உலகத்தில் சீனா, ராஸ்யா உட்பட சகல நாடுகளும் தமிழர்களது அரசியல் தீர்வில் அக்கறை கொண்டுள்ளதாக கூறுபவர்கள், சீனா ராஸ்யா, கியூபா போன்ற நாடுகளை பொறுத்த வரையில், இலங்கைதீவில் தமிழர்களிற்கான அரசியல் தீர்வு என்பது, ‘பஞ்சயத்து முறையே’ என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லை போலும்.
சிறிலங்காவில் மிளகாய்தூள் பிரச்சனைகள் நடக்கும் பொழுது, ராஜபக்சா பிரதமர் பதவியை விட்டு கொடுக்கும் கட்டத்தில், அவருக்கு எதிர்கட்சி பதவி கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்தியதை, பத்தாயிரம் மைல்களிற்கு அப்பால் வாழும் எமக்கு தெரிந்த விடயம், ஜனநாயகத்தை காப்பாற்றியதாக கூறும் இவர்களிற்கு தெரியவில்லை என்பது பூதாககரமான பொய், நடிப்பு.
தமிழீழ மக்களிற்கு இன்று தேவைபடுவது மூன்றில் இரண்டு நிலங்களை பறிகொடுத்துவிட்டு உலகிற்கு சாத்வீகம் பேசும் தீபெத்தின் தலலாம போன்ற அரசியல் தலைவர் அல்ல. மக்களின் பங்களிப்புடன் இந்தியாவின் உதவியுடன் ‘பங்காளதேசத்தை’ வென்றெடுத்த சேக் முஜீபூர் ராகுமான் போன்ற தலைவரையே தமிழீழ மக்கள் தேடுகிறார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
tchrfrance@hotmail.com
- அடுக்கடுக்கான கேள்விகள்! பொது அரங்கில் சுமந்திரனை தடுமாறச் செய்த வித்தியாதரன்
- புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பேச்சு
- விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்!