கிளிநொச்சியில் விழிப்புணர்வு ஊர்திகளுடன் சிறப்பாக இடம்பெற்றது சர்வதேச பெண்கள் தினம்

Report Print Suman Suman in இலங்கை

அனைத்திலும் சமத்துவம் எனும் தொணிப்பொருளில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது.

காலை பத்து மணிக்கு சர்வதேச பெண்கள் தின ஊர்வலம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வரும் பெண்கள் தின விழிப்புணர்வு ஊர்திகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி டிப்போச் சந்தியை சென்றடைந்தது பின்னர் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பெண்களுக்கான உரிமைகளை சமூகம் கற்றுணர்ந்து வழங்க வேண்டும். இல்லை போராடியே பெற வேண்டும் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம், பெண்கள் தின பிரகடணம், கவிதைகள் பறையிசை, நடனம் போன்ற அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன் போது 2019 க்கான பெண்கள் தின பிரகடனமும் முற்கொள்ப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

'அனைத்திலும் சமத்துவம்' என்ற நிலைப்பாடே பெண்களுடைய உரிமைகளையும் அவர்களுடைய விடுதலையையும் சாத்திப்படுத்தும். இந்த உண்மையின் உறுதியேற்பிலேயே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பெண்களின் விடுதலைக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டை 'சிறந்த பெண், அழகான உலகம்' என்று சர்வதேச சமூகம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், இது வழமையைப்போல அழகான மகுட வாக்கியமாக அமையாமல் நடைமுறை வாழ்வின் பிரயோகமாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த உலகம் அழகாக இருக்க வேண்டுமென்றால் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் சமமாக மதிப்பட்டு, அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும். ஏனெனில் உலகெங்கும் சிறந்த பெண்களே உள்ளனர். ஆனால் அவர்களுக்கான அழகான வாழ்க்கை கிடைத்திருக்கிறதா என்பதே கேள்வி.

1910 ஆண்டு உலக சோஷசலிஸ்ட் பெண்கள் மாநாட்டின்போது, மார்ச் 08 சர்வதேசப் பெண்கள் நாள் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு 100 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவே வேண்டியுள்ளது. ஆணுக்கு நிகர் பெண்ணென்று சொன்னாலும் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதிலேயே பாரபட்சம் இன்னும் நடைமுறையில் உண்டு. பெண்கள் இன்னும் பாதுகாப்பற்ற, அச்சம் நிறைந்த சூழலிலேயே வாழ வேண்டியுள்ளது.

ஆகவே பெண்களின் வாழ்வில் நாம் கவனம் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான பிரச்சினைகளை இந்தப் பெண்கள் நாளில் கவனப்படுத்திப் பிரகடனம் செய்கிறோம்.

1. சகலரையும் போல சமூக நீதி பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இது சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் அமையப்பெறுதல் அவசியம்.

2. ஆண், பெண் சமத்துவம் பற்றி பேசப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் பெண்களுக்கான சமத்துவம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றுள்ள நிலையை மாற்ற வேண்டும்.

3 . எமது பெண்கள் இனவிடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலையிலும் வியத்தகு ஆற்றலுடன் போராடி தமது ஆளுமையை வரலாற்றில் வெளிப்படுத்தியுள்ளனர். வியத்தகு அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர். ஆயினும் இன்னும் பெண்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பது துயரமே. அவர்களுடைய அந்த விடுதலைக் கனவை மனத்திலே கொண்டு அதை வெற்றிக்கொள்ள வேண்டும்.

4. பெண்கள் மீது அதிகரித்துள்ள வன்முறைகளை இல்லாதொழிக்க வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு சட்டத்தின் முன்பும், சமூகத்தின் முன்பும் உரிய நீதி கிடைக்கும் வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

5. பொருளாதார ரீதியாகவும், இன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வுகளிலே அதிகமாகப் பெண்களே பாதிக்கப்படுவதால் இதனை மாற்றி, அவர்களுக்கான சமசமூக நிலையை உறுதிசெய்தல் வேண்டும்.

6. போரின் பின்பு ஏற்பட்ட பாதிப்புக்களில் அனேகமானவை பெண்களை சார்ந்ததாகவே உள்ளதால் இதைச் சீரமைப்பதற்கான சிறப்புப் பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

7. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருக்கும் இக்காலகட்டத்தில் அதனை இல்லாதொழித்து, சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பெண்கள் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது அவசியம்.

8. கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு தொடர்ந்து நிலவும் தடைகள் நீக்கப்பட்டு, அவர்களுக்குரிய மதிப்பும் இடமும் வழங்கப்பட வேண்டும்.

9. ஆண், பெண் என்ற அடிப்படையில் சம்பளத்தை வழங்காமல் உழைப்புக்கு ஊதியம் என்ற வகையில் வழங்க வேண்டும். இதைச் சட்டமூலமாக்குவது அவசியம்.

10. நுண்கடன் திட்டத்தினால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து பெண்களை விழிப்படைய வைத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் அவசியமாகும்.

11. வடக்குக் கிழக்கில் அதிகரித்திருக்கும் பெண் தலைமைத்துவத்தை அரச, தனியார் நிறுவனங்களில் அங்கீகரிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். பெண் தலைமைத்துவத்தினர் மீதான தவறான புரிதல்களையும் தவறான, ஆதாரமற்ற பிரச்சாரங்களையும் இல்லாதொழிக்க வேண்டும்.

12. பெண்களின் பிரச்சினைகளைக் கையாளும் திறன் மிக்க உத்தியோகத்தர்கள், பெண் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கான தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்.

13. மது மற்றும் போதைப்பொருட்பாவனையில் ஈடுபடுகின்றவர்களால் பெண்கள் குடும்பங்களிலும் பொது வெளியிலும் இன்னலுக்குட்படுகின்றனர். இதைத் தடுப்பதற்கு சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

14. குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுகின்ற பெண்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் அவசியமாகப்பட வேண்டும்.

15. மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் பெண்களை உடைய குடும்பங்களின் பிள்ளைகள் உள நிலையிலும் வாழ்நிலையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தி பெண்களையும் பிள்ளைகளையும் பாதுகாத்துச் சமூகத்துக்கு வழமாக்குதல் வேண்டும்.

16. போரினால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்தவர்கள் பெண்களே. இன்னும் தங்கள் பிள்ளைகளைத் தேடுவோராகவும் துணைவரைத் தேடி அலைவோராகவும் உள்ள பெண்களின் துயரத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.