பிரிகேடியர் கடாபியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் எம்.பி!

Report Print Kaviyan in இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி, எண்ணிலடங்காத மகத்தான பல தியாகங்களைச் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல முக்கிய தாக்குதல்களைத் திட்டமிட்டு நெறிப்படுத்தியவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்த தளபதியும் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் போரிட்டு வீரகாவியமான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் காலமானதை அடுத்து, அவரது இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் நெல்லியடி நவிண்டிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தனது அஞ்சலியைச் செலுத்தியிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலை விரும்பியான அன்னை அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது பிள்ளையை உவந்தளித்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அஞ்சலி செலுத்தி அங்கு இரங்கலுரை ஆற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள், 'வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டத்திற்கு தனது பாசமகனை உவந்தளித்த பெருமைக்குரிய அன்னை ஆறுமுகம் மகேஸ்வரி அம்மாவின் மறைவு தமிழ்ச் சமூகத்;திற்குப் பேரிழப்பாகும். அன்னையவர்களும் எமது ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத அன்னையாகக் காணப்படுகின்றார். அன்னை அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம். இவரது ஆத்மா நித்திய சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் மரியாதைக்குரியவர்கள்' என்றார்.