ஐ.நா மனித உரிமை சபையின் இலங்கை தீர்மானம் தொடர்பான முதல் வரைவு

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in இலங்கை

ஐ.நா மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை 5ஆம் திகதி இலங்கை பற்றிய தீர்மானத்தின் முதல் வரைவு பிரித்தானியாவினால் உத்தியோகப்பற்றற்ற ஆலோசனைக்கு ஐ.நா மண்டபத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வரைவை பிரித்தானியா தலைமையில் இலங்கை விடயத்தில் கூட்டு குழு (Co-group) என கூறப்படும் பிரித்தானியா, மசிடோனியா, வடக்கு, மொன்ரநீகிறோ, ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகள் தயார் செய்துள்ளது.

இந்த கூட்டத்தை பிரித்தானியாவின் பிரதிநிதி பொப் லாஸ்ந் தலைமை தாங்கி நடத்தினார். ஓர் தீர்மானம் என்பது இரு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக காணப்படும்.

அந்த அடிப்படையில் இலங்கை பற்றிய வரைவில் முதற்பகுதி (Preamble) பதினொரு பந்திகளையும், இரண்டாவது பகுதி (Operating) நான்கு பந்திகளையும் கொண்டதாக காணப்படுகிறது.

கூட்டம் ஆரம்பமாகியதும் பிரித்தானியாவின் பிரதிநிதி பொப் லாஸ்ந் தீர்மானத்திற்கு உரிய நாடான இலங்கையின் ஐ.நா ஜெனிவா பிரதிநிதி அஸீஸ்ஸை உரையாற்றுமாறு அழைத்தார்.

அஸீஸ் தனது கருத்தை கூறும் போது, தற்போது கொண்டுவரப்படும் வரைபை இலங்கை ஏற்றுக் கொள்வதாகவும், இதேவேளை இலங்கை இத்தீர்மானத்திற்கு இணையனுசரணை(Co-sponsor) செய்வதாகக் கூறியதுடன், தாம் மேலும் கருத்து கூறாது மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கேட்கவுள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பொப் லாஸ்ந் அங்கு சமூகமளித்திருந்த நாட்டு பிரதிநிதிகளின் பொதுவான கருத்துக்களை கூறுமாறு வேண்டியிருந்தார். இவ்வேளையில் இந்தியா உட்பட ஐரோப்பிய யூனியன், சுவீடன், சுவிஸ்லாந்து, அவுஸ்திரீயா, டென்மார்க், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கங்கேரி, செக்குடியரசு ஆகிய நாடுகள் தாம் இவ்வரைவை ஏற்பதாக கூறின.

ஆனால் அவுஸ்திரீயா, சுவீடன், சுவிர்ஸர்லாந்து ஆகிய நாடுகள் வரைவை ஆலோசனை செய்யும் வேளையில் தாம் சில மாற்றங்கள் தொடர்பாக கூறவுள்ளதாக கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வரைவு பற்றிய ஆலோசனை கருத்துப் பரிமாறல் ஆரம்பமாகியது. கனடாவின் பிரதிநிதி வரைவின் முதல் பகுதியான பதினொரு பந்திகளை ஒவ்வொன்றாக வாசித்து நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறியும் வேளையில் சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சில மாற்றங்களை முன்மொழிந்ததுடன்

பிரான்ஸின் பிரதிநிதி இதில் புதிதாக பன்னிரண்டாவது பந்தியொன்றை இணைக்குமாறு தமது ஆலோசனையை கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜேர்மனி நாட்டின் பிரதிநிதி நான்கு பந்திகளை கொண்ட அறிக்கையை அங்கு வாசித்து நாடுகளின் கருத்தை வேண்டிய வேளையில் சுவீடன், சுவிர்ஸர்லாந்து ஆகிய இரு நாடுகளும் பல வசன நடைகளை மாற்றுமாறு வேண்டியதுடன், சில விடயங்களை கடுமையாக அழுத்தியுரைக்குமாறு கூறியிருந்தன.

இவ்வரைவு கூடுதலாக முன்னைய தீர்மானங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக காணப்பட்டதுடன், புதிதாக இணைக்கப்பட்டுள்ள விடயங்கள் கறுப்பு வர்ணம் தீட்டப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வரைவின் பதினோராவது பந்தியில் ஓர் நேர அட்டவணையுடன் தீர்மானத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இதே இடத்தில் நான்காவது பந்தியில் நேரடியாக இரு வருட அவகாசம் கொடுக்கப்படுவதாக கூறாது இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் எதிர்வரும் 43ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை காரியாலயத்தினால் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென கூறப்படுகிறது.

43ஆவது கூட்டத்தொடர் என்பது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 46ஆவது கூட்டத்தொடரில் இன்னுமொரு அறிக்கையை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறுமென கூறப்படுகிறது.

46ஆவது கூட்டத்தொடர் என்பது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னும் பொழுது சரியாக இருவருட கால அவகாசம் என்பது தெளிவாகிறது. ஒருவருடத்தின் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளரின் காரியாலயத்தினால் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை குறைக்குமாறு சுவீடன், சுவிர்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மாற்றங்களை முன்மொழிந்தனர்.

இவ் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கவனத்தில் கொண்டு மாற்றங்கள் செய்த பின் இன்னுமொரு கூட்டத்தை கூட்டுவதாக கூட்டுக்குழு நாடுகள் கூறியிருந்தன.

இவற்றை தொடர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்தை கூட்டத்தின் தலைவர் வேண்டிய வேளையில், எல்லாமாக பன்னிரெண்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அங்கு கருத்து கூறியிருந்தனர்.

இவற்றில் சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பு, ஆசிய அமைப்பு, தமிழ் மனித உரிமைகள் மையம், பிரான்ஸ் உட்பட ஐந்து புலம் பெயர் வாழ் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து கூறியிருந்தனர்.

அவர்களது கருத்துகளை சுருக்கமாக கூறுவதானால், இவ்வரைவு நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஒரு பொழுதும் திருப்திப்படுத்தப் போவதில்லை.

நீங்கள் கொடுக்கும் இவ் நீண்ட கால அவகாசம் என்பது இலங்கை அரசு தமது திட்டமான பௌத்தசமயம், சிங்கள குடியேற்றம், சிங்கள மயம், இராணுவ மயம் ஆகியவற்றை மிக வெற்றிகரமாக தொடர்ந்து வடக்கு, கிழக்கில் செய்வதற்கு அனுமதிக்கும்.

ஆகையால் நீங்கள் கால அவகாசம் கொடுப்பதை நிறுத்தி போர்க்குற்றமிழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப முன் வரவேண்டும்.

உங்களது முன்வரைவு பத்து வருடமாக நீதி கிடையாது அவலப்படும் மக்களுக்கானது அல்ல என பல விடயங்களை கூறியிருந்தார்கள்.

எனினும், இத்தீர்மானம் பற்றி இலங்கை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்குமிடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை அதிகரிக்கும் கட்டத்தில் இலங்கை மிகவும் கடுமையான தீர்மானத்தை சந்திக்க நேரிடுவதுடன், இது பெரும்பான்மை வாக்குகளால் 46ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமென ஐ.நா அவதானிகள் கருத்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tchrfrance@hotmail.com ச. வி. கிருபாகரன்

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 12 MAR 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு tchrfrance@hotmail.com அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.