வடக்கு கிழக்குமாகாணங்களின் கல்விவீழ்ச்சிக்கு என்ன காரணம்?

Report Print V.T.Sahadevarajah in இலங்கை

இலங்கையின் கல்வியில் குறிப்பாக பொதுத்தேர்வுகளில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்னடைவிலிருப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டிவந்தன.

அதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் இவ்வாரம் வெளியாகிய க.பொ.த..சா.த. பெறுபேறுகளும் ஆதாரமாக மாறியுள்ளன.

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் உரியதினத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

ஒருகாலத்தில் இலங்கையில் கல்வியில் கொடிகட்டிப்பறந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று கொடிகளாக ஒடுங்கியுள்ளன.

கல்வியில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இறுதிநிலையிலிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்கிறார்கள்.

காணரங்களும் குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுவருகின்றனவே தவிர அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ யாரும்முன்வருவதாகஇல்லை. இந்நலை தொடர்ந்தால் நிலை மேலும் மோசமாகலாம்.

எனவே மாகாண ஆளுநர்கள் முதல் அங்கிருக்கக்கூடிய கல்வியலாளர்கள் இதுவிடயத்தில் விசேடகவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை இம்முறை வெளியான சா.த. பரீட்சைப்பெறுபேறுகளும் சுட்டிக்காட்டிநிற்கின்றன. வடக்கு கிழக்கில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களும் இது தொடர்பான ஆய்வுகளைச்செய்யவேண்;டும். குறிப்பாக கல்விப்பீடங்களைக்கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் இதுவிடயத்தில் கவனம்செலுத்தவேண்டிய கட்டாய தார்மீக கடமையுண்டு.

வடக்கு கிழக்கு ஆளுநர்கள் உடனடியாகச்செயற்பட்டு இம்மாநிலத்தில் ஏலவே இருந்த கல்வித்துறை உயரதிகாரிகள்( உதாரணம் சுந்தரம் டிவகலாலா) பல்கலை கல்வியியலாளர்கள் ஆராய்ச்சியாளர்களை அழைத்து ஒருகுழுவை நியமித்து என்னசெய்யலாம் என்று ஆராயவேண்டும். அந்த ஆய்வின்முடிவுகளை செயற்படுத்தும் போது ஓரளவு மீளக்கட்டியெழுப்பமுடியுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பின்னடைவுக்கு காரணம் என்ன?

இதற்குக்காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது ஆய்வுக்குரிய விடயம் .

இருந்தபோதிலும் ஆசிரியர்கள் விடயத்தில் நிருவாகங்கள் நடந்துகொள்ளும் பாரபட்சநடைமுறையும் ஒருகாரணமாகவிருக்கலாமென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. ஆசிரிய நியமனம் தொடக்கம் இடமாற்றம் வரை பாரபட்சமாகவே இடம்பெறுவதாக அவர்கள்கூறுகிறார்கள். அதேவேளை பல ஆசிரியதொழிற்சங்கங்கள் வெறுமனே அறிக்கையில் காலங்கடத்துவதாகவும் தமது நலன்களை துளியேனும் கவனிக்கிறார்களில்லை என ஆசிரியர்களும் கூறிவருகிறார்கள். எதுஎப்படியிருப்பினும் ஆசிரியர்களது மனங்கள் வெல்லப்படவேண்டும். அவர்களது கல்விக்கொள்ளளவே நாட்டின் கல்வி மட்டமாகும் என்பதை மறந்துவிடலாகாது.

நேற்று யாழ்ப்பாணத்தில் பேசிய த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவரான த.சித்தார்த்தன் கூறுகையில் இப்பின்னடைவுக்கு கடந்தகால யுத்தமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் யுத்தகாலத்தில்கூட கல்விநிலைமை இத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதை பலரும் பலசந்தர்ப்பங்களில் பேசிவருவதையும் மறுதலிக்கமுடியாது.

அண்மையில் சம்மாந்துறைக்கு விஜயம்செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்ட 3நிகழ்வுகளிலும் வடக்குகிழக்கு மாகாணங்களின் பின்னடைவு பற்றிப்பேசியிருந்தார். அவரது கருத்தில் இந்த மோசமான பின்னடைவுக்கு க்காணரம் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த அநியாயமே. பாடசாலைகளை அழித்தார்கள். கல்விமான்களை கொன்றொழித்தார்கள். பாடசாலைப்பிரதேசங்களை இராணுவஉயர்பாதுகாப்பு பிரதேசமாக மாற்றினார்கள். இந்நிலையில் எவ்வாறு கல்வி வடக்குகிழக்கில் வளரும் ? என்று அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.

கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகையில் கிழக்கில் இருக்கக்கூடிய ஆளணிகள் அனைத்தையும் புள்ளவிபரங்களுடன் விலாவாhரியாகச்சொல்லி இத்துணை ஆளணிகள் கல்வித்துறையில் இருந்தபோதிலும் கிழக்குமாகாணம் இறுதிமாகாணமாக உள்ளது. இவர்கள் அனைவரும் இல்லாவிட்டாலும் கிழக்கு இறுதிமாகாணமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கையில் உள்ளதே 9மாகாணங்கள்தான் என்றார். இதுவும் ஈண்டுகவனிக்கத்தக்கது. இதேவிடயத்தை முன்னாள் கிழக்குக்கல்விச்செயலாளர் திசாநாயக்க எனது தலைமையில் திருமலையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

பட்டதாரிகளை தொடர்ந்து புறந்தள்ளிவருவதே கல்விப்பின்னடைவுக்கான காரணம் என்று வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் யசீர்ஹமீட் குற்றச்சாட்டுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். ஆனால் கிழக்கு மாகாணசபை 2000 உயர்தரசித்திபெற்றவர்களையும் 800 தொண்டர்ஆசிரியர்களையும் 600 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள விண்ணப்பங்களைக்கோரியுள்ளது. எனவே 7000 வேலையில்லாப்பட்டதாரிகளில் 2000பேரையாவது இணைத்துக்கொள்ள ஆளுநர் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டுவருகின்றவே தவிர ஆக்கபூர்வமான யோசனைகளை ஆய்வுகளை யாரும் சொல்வதாக இல்லை என இம்மாகாண மக்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்நிலைதொடர்ந்தால் வடக்கு கிழக்கு கல்வி நிலைமை மேலும் வீழ்ச்சியடையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.

இம்முறை வெளியான பெறுபேறு மீதான பார்வை!

இம்முறை வெளியான பரீட்சைப்பெறுபேறுகளின்படி மாகாணரீதியாக 25மாவட்டங்களிலும் தோற்றிய சித்தியடைந்த மாணவர்களின் விபரத்தை கல்விஅமைச்சின் பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்வரும் தகவல்கள் வெளியாகின்றன.

அண்மையில் வெளியிடப்பட்ட கபொத சாதாரண தரத் தேர்வு பெறுபேறுகளின் படி முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் பத்து இடங்களில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பிடிக்கவில்லை. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர்.

அண்மைக்காலமாக இலங்கைப்பரீட்சைத்திணைக்களம் மிகவும் நேர்த்தியாக இறுக்கமான நம்பகத்தன்மையானமுறையில் பொதுப்பரீட்சைகளை நடாத்திவருவது பாராட்டுக்குரியது.

அதற்காக ஆணையாளர் பிரதிஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரைப்பாராட்டலாம். உரியகாலத்தில் பரீட்சைநடாத்தவதும் உரியதினத்தில் முடிவுகளை வெளியிடுகின்ற நேர்த்தியான கண்ணியமான செயற்பாட்டிற்கு நன்றியும் பாராட்டும் தெரிக்கின்றோம்.

மாவட்டரீதியாக முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்களது விபரங்களையும் பரீட்சைத்திணைக்களம் எதிர்காலத்தில் வெளியிடவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில்இ சராசரி பெறுபேற்றை விட குறைந்தளவிலேயே வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் நிலையும் காணப்படுகிறது.

22910 மாணவர்கள் தேர்வில் தோற்றிய அம்பாறை மாவட்டத்தில் இருந்து 8163 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 17126 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 6419 மாணவர்களே உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 14291 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 4724 மாணவர்களே உயர்கல்விக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

17495 மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தேர்வில் தோற்றியிருந்த போதும் 6337 பேரே உயர்வகுப்புக்குச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4404 மாணவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். அவர்களில் 1434 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 3638 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 1321 மாணவர்களே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

3494 மாணவர்கள் தேர்வில் தோற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1246 மாணவர்களே உயர்வகுப்புக்குச் செல்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 5143 மாவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 1129 பேர் மாத்திரமே உயர்கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கபொத சாதாரண தர தேர்வில் இம்முறை – நாடளாவிய ரீதியாக சராசரியாக 71.66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 518184 பரீட்சார்திதகள் தோற்றிதில் 235373பரீட்சார்த்திகள் சித்திபெற்றுள்ளனர். அதாவது அது 71.66வீதமாகும். இவர்களில் 9413 பேர் சகலபாடங்களிலும் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாறுபடைத்திருக்கிறார்கள் என்பது திணைக்களத்தின் பதிவாகும்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 சதவீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில்இ யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும்மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும் வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும்இ அதற்கு முந்திய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன.

தேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66) அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும்இ வடக்குஇ கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இப்பெறுபேறு பல தகவல்களை கூறுகின்ற அதேவேளை ஆய்வின் அவசியத்தை சுட்டிநிற்கின்றது. தாமதிக்கும் ஒவ்வொருகணமும் மேலும் வீழ்ச்சிப்பாதையைநோக்கிச்செல்லவே வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விழித்தெழுந்து ஆக்கபூர்வமான vஅனைவரினதும் அவா.

வி.ரி.சகாதேவராஜா