ஜனாதிபதி பராளுமன்றத்திற்கு விஜயம் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் சந்திப்பு

Report Print Thayalan Thayalan in இலங்கை
118Shares

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்போது கழிவு முகாமைத்துவத்திற்கான கொள்கை ரீதியான வேலைத்திட்டத்தின் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அந்த வேலைத்திட்டமானது அரசியல் கட்சி பேதமின்றி, அரசியல் கொள்கைக்குள் உள்ளடங்கியவாறு அந்த வேலைத்திட்டம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , விஞ்ஞான பொறிமுறைகளுக்கமைய தயாரிக்கப்படும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது மக்களின் எதிர்ப்புகள் தோன்றுவதாகவும் இதன் காரணமாகவே கழிவு முகாமைத்துவத்திற்கான தீர்வுகளை வழங்குவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கழிவுகளை அகற்றுவதற்கான சட்டபூர்வமான பொறுப்பு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களின் வசம் போதியளவு வளங்கள் இல்லாமையும் பாரிய பிரச்சினையாக அமைந்திருப்பதாகவும் இந்த பிரதான இரு பிரச்சினைகளுக்கும் தேசிய ரீதியிலான துரித தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதன் 95 வீதமான நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றிருப்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் அந்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மகாவலி செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காணிகள் அரசியல் தேவைகளின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு போலியானவை என்றும் அந்த வேலைத்திட்டத்தில் எந்தவிதமான ஊழல், மோசடி மற்றும் அரசியல் பாரபட்சங்கள் கையாளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்தோருக்கு இதுவரையில் வழங்கப்படாதவாறு பாரியளவிலான நஷ்டஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி முப்படையைவலுவூட்டும் கொள்கையை பலவீனப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக முப்படையினர் பாரிய பங்களிப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் வடக்கு, கிழக்கு மக்களும் முப்படையினரும் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நேயமிக்க பொலிஸ் சேவையை ஸ்தாபித்து பொலிஸ் திணைக்களத்தின் அனைவருக்கும் திருப்தியான மனநிலையுடன் பணியாற்றுவதற்கான பின்புலத்தை தயாரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததுடன், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போதும் குற்றச்செயல் தடுப்பு சட்டங்களின் போதும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புகளையும் பாராட்டினார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் சந்திப்பு

வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இவ்விசேட செயலணியை நிறுவியதன் பின்னர் வட, கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக பின்னடைவைச் சந்தித்திருக்கும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தி அப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி அவர்களினால் வட, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த அமர்வின் போது குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு சம்பந்தமான தற்போதைய நிலைமை, சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், அரச படைகள் ஆகியன தமது முன்மொழிவுகள், தீர்வுகள் ஆகியவற்றை முன்வைத்தன.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்விரு மாவட்டங்களின் அரசியல் தலைவர்கள், படை அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இரு மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்தோடு அக்கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட இயலாத பிரச்சினைகள் இருப்பின் அது பற்றிய தத்தமது முன்மொழிவுகளுடன் தமக்கு சமர்ப்பிக்குமாறும் எதிர்வரும் மே மாதத்திற்குள் அப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு மனிதநேய மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தபோது வட, கிழக்கு மாகாணங்களின் சுமார் 84,675 ஏக்கர் நிலம் அரச பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுடன், கன்னிவெடிகளை அகற்றும் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நில விடுவிப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் துரிதமாக்கப்பட்டதுடன், இதுவரை அதாவது 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை பாதுகாப்பு படைகள் வசம் இருந்துவந்த 84,675 ஏக்கர்களில் 71,178 ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

அத்தோடு வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து அம்மாகாணங்களின் ஆளுநர்கள், படைத்தரப்புக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பினால் இதுவரை 6,951 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்பட இருக்கின்றன.

தற்போது அரச படைகள் வசம் 13,497 ஏக்கர் நிலம் இருந்து வருவதுடன், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகளாகும். அவற்றில் கோரியிருக்கும் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் மேலும் 475 ஏக்கர் காணிகளை எதிர்வரும் காலங்களில் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய வட, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த நிலங்களில் அரசுக்கு சொந்தமான 81 சதவீத நிலங்களும் தனியாருக்கு சொந்தமான 90 சதவீத நிலங்களும் இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சியிருக்கின்ற நிலங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படாத நிலங்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விடுவிக்க இயலாத நிலங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இவ்வமர்வின்போது ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இவ்வமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட அவ்விரு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர், அரசாங்க அதிபர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.