கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தீவிரமடையும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Report Print Dias Dias in இலங்கை

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என்பது உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இன்று முற்பகல் 10.15 க்கு உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த அவர், அதற்கு முன்னதாக தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் அத்துரலிய ரத்தன தேரர் அனுப்பிவைத்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களும், நடுநிலையான முஸ்லிம் மக்களும், சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில், அடிப்படைவாதத்திற்கு ஆதரவளிக்கும் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள், பொதுமக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அடிப்படைவாத அமைச்சர்களையும், ஆளுநர்களையும் பதவிகளிலிருந்து நீக்கி, விசாரணை மேற்கொள்ள இடமளிக்குமாறு மகாசங்கத்தினரும், சமய மற்றும் அரசியல் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காத காரணத்தினால், தான் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers