குழப்பமான அரசியல் சூழ்நிலை! மைத்திரி - ரணில் இல்லாத இலங்கை

Report Print Dias Dias in இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நாளை ஜனாதிபதியும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்வாறு ஸ்திரமற்ற நிலையில் நாட்டை விட்டு ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலையே நிலவுகிறது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போது முஸ்லிம் தலைவர்களின் ராஜினாமா, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் வெளிவரும் உண்மைகள், அமைச்சரவை இரத்து உள்ளிட்ட பல விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் மூலம் வெளிவரும் தகவல்கள் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு எதிராகவே அமைந்துள்ளன.

இதன்காரணமாக குறித்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு கோரியதுடன், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை சந்திப்பதற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

ஜனாதிபதி - பிரதமர் வகித்து வந்த முக்கிய பொறுப்புக்கள் யாரிடம் ஒப்படைக்கப் பட்டது என்பது தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளினால் பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை பொருளாதாரத்திலும் இலங்கை பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டுக்கான பயணங்களை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் நெருக்கடி நிலைகளை யார் கையாள்வார் என்னும் கேள்வி தற்போது ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக அபிவிருத்தியில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரதமரும், ஜனாதிபதியும் தங்களின் முக்கிய பணிகளை யாரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள்?

குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லை. அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சும் அவர் கையில் தான். முப்படைகளின் தளபதியும் கூட ஜனாதிபதி வசமே இருக்கின்றன.

எனவே தன்னுடைய பொறுப்புக்களை அன்று வெளிநாடு செல்லும் போது தகுதிவாய்ந்த அமைச்சர் ஒருவரை நியமித்துவிட்டு போயிருந்தால் அன்றைய தினம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனால் அப்படியெதுவும் ஒழுங்குகள் செய்யப்படாமல் இருக்கவே, தாக்குதல் சம்பவம் நடந்தது. எனினும் ஜனாதிபதி அதற்கான பொறுப்பினைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் தனக்குத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று மிக இலகுவாகத் தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மேசைக்கும் இது இழுத்துவரப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சிங்கப்புர் பயணமாகும் பிரதமர் தன்னுடைய அமைச்சுப் பொறுப்புக்களையும் தகுதிவாய்ந்த அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வதும் சிறப்பானது என்று அரசியல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எதுவாயினும், அதிகாரப் பீடத்தில் இருப்பவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று குற்றம்சாட்டுகின்றார்கள்.