நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் பதற்றம்

Report Print Dias Dias in இலங்கை

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மீண்டும் ஓர் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து வருடாந்த பொங்கல் உற்சவத்தினை கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழாவாக மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

பொங்கல் உற்சவத்திற்காக வருகை தரும் பக்தர்கள் அமர்ந்திருக்கஆலய வளாகத்திலேயே தற்காலிக தகர பந்தல்கள் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்காலிக தகர பந்தல்களை அமைத்ததற்கு எதிராக வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில், தமது குருகந்த ரஜமகா விகாரை என்னும் புராதன விகாரை வளவினுள் ஆலய நிர்வாகத்தினர் பந்தல்களை அமைத்தார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் நிலையத்துக்கு சென்ற ஆலய நிர்வாகத்தினர் தாம் நீதிமன்றத் தீர்ப்பிற்க்கு அமைவாகவே பொங்கல் உற்சவத்தை கொண்டாடியதாகவும் நீதிமன்ற தீர்ப்பின் உள்ளபடி தமக்கு வழிபடுவதற்கான சுதந்திரம் இருக்கின்றது எனவும் நீதிமன்ற தீர்ப்பின்படி தாம் அந்த பொங்கல் நிகழ்வை அனுஷ்டித்ததாகவும் அதற்கு வருகை தரும் பக்தர்கள் வெயில் கொடுமையில் அகப்படக் கூடாது எனும் வகையிலும் பொங்கல் நிகழ்வுகளை நடத்துவதற்காகவும் தற்காலிக பந்தல்களை அங்கு அமைத்ததாகவும் தெரிவித்தனர்.

இருந்தும் தம்மால் வாக்குமூலங்களை வழங்க முடியாதெனவும் தாம் எமது ஆலயத்திலேயே வழிபாடுகளை மேற்கொண்டதாகவும் இது தொடர்பில் தமது சட்டத்தரணியின் ஆலோசனையின் படி தொடர்ந்து வாக்குமூலத்தை வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்துவிட்டு ஆலை நிர்வாகத்தினர் திரும்பியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த சனிக்கிழமை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இப்பொங்கல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வேளையில் அங்கே நடைபெறும் பொங்கல் நிகழ்வுகளுக்காகவும் அன்னதானம் போன்றவற்றை வழங்குவதற்காகவும் ஆலய வளாகத்தில் தகர பந்தல்கள் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்தது .

எனினும் பொலிசாரால் சில தகர பந்தல்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களின் முறைப்பாட்டின் படி அன்றைய தினமே பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் ஆலயத்துக்கு வருகை தந்த மக்கள் அன்னதானம் உண்ண முடியாத அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this video....