ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட தேர்த்திருவிழா! பக்தர்களுக்கு இப்படியொரு அவலமா?

Report Print Sujitha Sri in இலங்கை
2176Shares

ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய ஆலயமான ஹம் ஸ்ரீ காமாட்சி ஆலயம், கலை மற்றும் கலாச்சாரம் ததும்பும் வகையில் ஜேர்மனி அரசின் அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.

ஜேர்மனி நாட்டில் ஹம் நகரின் எல்லைக்குள் உன்ட்ராப் என்ற ஊரில் கிழக்கு முகமாய் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரமாண்ட திருக்கோவில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், அதனடியில் கொடிமர விநாயகர், இடதுபுறம் விநாயகர் சந்நிதி, சிவன் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் சந்நிதி, லட்சுமி நாராயணர் சந்நிதி, கோமுகத்தின் எதிரே சண்டிகேஸ்வரி, வசந்த மண்டபம், சோமாஸ்கந்தர், நவக்கிரக சந்நிதி, ஐயப்பன் மற்றும் பைரவர் சந்நிதிகள் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன.

இவற்றின் நடுநாயகமாக அன்னை காமாட்சி அன்னையின் சந்நிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் வெளியே தனி சந்நிதியில் சனிபகவான் அமைந்துள்ளார். ஆலயத்தின் வெளியே ஈசான்ய மூலையில் திருத்தேர் மண்டபம் இருக்கிறது.

தாயகத்திலுள்ள இந்து ஆலயங்களை போன்று இந்த ஆலயமும் ஜேர்மனி மண்ணில் கலசத்துடனான கோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.

இத்திருக்கோவிலுக்கு தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் டால்ட்டென் கெனால் என்ற ஜீவநதி ஓடுகிறது.

இந்த நதியில்தான் இவ்வாலயத்தின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஆலயத்தின் அருகாமையில் ஜீவநதி ஓடுவதும் இறையருளே.

இத்தனை சிறப்புகளை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு சிற்பாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான சுமார் பத்தாயிரம் பக்தர்கள் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

பக்தர்களுக்கு இப்படியொரு அவலமா?

எனினும் ஆரம்பத்தில் 25000, 30000 என பக்தர்கள் இவ்வாலய தேர்த்திருவிழாவின் போது வருகை தந்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கையானது தற்போது பல மடங்காக குறைந்துள்ளது என பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு தேர்த்திருவிழாவிற்காக வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமையே காரணம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.பாதுகாப்பை கருத்திற் கொண்டு வாகனங்களை தூர இடத்தில் நிறுத்திவிட்டு வெகு தூரம் நடந்து வரவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது என குறிப்பிடுகின்றனர்.

ஆலயத்திற்கு நேர்ந்துள்ள அவலம்

ஆலயம் என்பது இந்துக்களின் புனித இடமாகும். ஆலயங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது ஆலயத்தை நிர்வகிப்பவர்களின் பொறுப்பு என்பதற்கு அப்பால் ஆலயத்திற்கு இறைவனை காண செல்லும் பக்தர்களின் கடமையாக காணப்படுகிறது.

எனினும் ஜேர்மன் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்ற அன்று அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவு மீதிகள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பன குவிந்து கிடந்துள்ளன.

ஆலயத்தில் அதுவும் ஆலயத்திற்கு உள்ளே இறைசந்நிதானத்திற்கு அருகில் குப்பைகளை போட்டு பக்தர்கள் தவறு இழைத்துள்ளமை மாத்திரமின்றி இவற்றை உடனேயே அகற்ற ஆலயத்தை சேர்ந்தவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.