சர்வதேசத்திற்கு சஜித் கூறியது! மரணத்தை கண்டு அச்சமடைய மாட்டேன்

Report Print Dias Dias in இலங்கை

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வீதியிலிறங்கி போராடி உயிர்தியாகம் செய்யவும் நான் தயார் எனவும் என்னுடைய வாக்குறுதிகளை நம்பி என்னுடன் கைகோருங்கள் என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு பதுளை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இராணுவ ஆட்சியின் ஊடாக மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. இராணுவத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கததிற்கு காணப்படுகின்றது. இந்த பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலக முடியாது.

எமது அரசாங்கத்தில் தீவிரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். இன்று நாட்டின் இறையாண்மை அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.

சர்வதேவசத்திடம் நாட்டில் இறையாண்மையினை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது.

ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகளாகவே உள்ளார்கள் எவரும். பிற நாட்டு குடியுரிமையினை பெறவில்லை. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒப்பந்தங்களும் எவருடனும் செய்து கொள்ளவில்லை.

இனியும் செய்யப் போவதும் இல்லை. பொய்யுரைக்காத சிறந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு இனத்திற்கு மாத்திரம் அரசாங்கம் உருவாக்கப்படாது. அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவம் அரசாங்கம் நிச்சயம் தோற்றுவிக்கப்படும்.

நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார். பலமான ஆட்சியினை தோற்றம் பெறுவதற்கு அனைத்து இன மக்களும் கட்சி பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டும்

30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் நிச்சயமாக மலையக மக்களை பாதுகாப்போம்.

மேலும், தற்போது சர்வதேச ரீதியாக செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்கள் குறித்து அதிகளவாக கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஒன்றை இங்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதாவது நாட்டுக்கு பயனுள்ள எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாம் எமது காலத்தில் செய்துக்கொள்ளப்போவதில்லை என்பதையும் இங்கு உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரச சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது பயணத்தில் அனைத்தையும் விட நாங்கள் மனிதத்துக்கு முதலிடம் வழங்குவோம்.

உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தயார்.

எனக்கு 52 வயதாகிவிட்டது. நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன் என்றார்.

இதேவேளை வடக்கு மக்களின் குறிப்பாக வன்னிப் பகுதிகளுக்குச் சென்று வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக் கூறிவரும் சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவினை எடுக்கப் போகின்றார்கள் என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டுவருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவும் தற்போது மிகப்பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் மௌனம் கலைக்கப்பட வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers