இலங்கை உள்ளிட்ட 36 நாடுகள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு

Report Print Dias Dias in இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விஷேட நிபுணர்களினால் ஆராயப்படவிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது.

இதன்போது இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படுதலுடன் தொடர்புடைய சுமார் 530 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

மேற்படி ஐ.நா குழுவில் சுயாதீன மனித உரிமை விவகார நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் காணாமல்போனோரின் உறவினர்கள், அரசதரப்பு உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் விரைவில் வெளிவரவுள்ள வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பில் செயற்திறனான விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த அரச கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றியும், அரசாங்கமல்லாத தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல் சம்பவங்கள் பற்றியும் நிபுணர் குழுவினால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகள் குழுவின் உள்ளக மற்றும் எதிர்காலத்திட்டங்கள், எதிர்வரும் ஆண்டிற்கெனத் திட்டமிட்டிருக்கும் உத்தியோகபூர்வ விஜயங்கள் தொடர்பிலும் 16 – 20 வரையான கூட்டத்தின் போது ஆராயப்படும்.

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தை அமுல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்துக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.