இலங்கைக்கு எதிராக சதி செய்யும் ஐ.நா..?

Report Print Gokulan Gokulan in இலங்கை

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவம் 1960ஆம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வந்துள்ளமையை கருத்தில் கொண்டு தமது படையினர் மீது சற்று கரிசனை காட்டுமாறு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் பீடத்தின் மூலதன நிலைமை குறித்து ஆராயப்படும் கூட்டத் தொடரின் ஐந்தாவது நாள் அமர்வில் கலந்துக் கொண்டு உரையாடிய இலங்கையின் பிரதிநிதியும் கனடாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகருமான சிதாரா கான் இந்த கோரிக்கையை சபையில் முன் வைத்ததாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உயர் பீடத்தின் தலைவர் டிஜானி மொஹமட் காண்டே தலைமையில் குறித்த கூட்டத் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் அங்கத்துவ நாடாக இலங்கையும் அதன் இராணுவ செயற்படுகளுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் இலங்கை இராணுவத்தை வெளியேற்றியமை மிகவும் மோசமான செயல் என அவர் இதன்போது விமர்சித்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள நாடுகளுக்கு பொதுவான முறையில் அதன் சலுகைகளும் பிரதிபலன்களும் கிடைக்க பெற வேண்டும் என்றும் இலங்கைக்கான பிரதிநிதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த செயலானது ஒரு இறையாண்மை அரசுக்கு எதிராக முன்னெடுத்துள்ள சதி எனவும் இங்கு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலானது இலங்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கையாகவே கருத்தப்படவேண்டியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேபோல ஒரு நாட்டின் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக தாம் இதனை காணுவதாகவும் இலங்கையின் பிரதிநிதியும் கனடாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகருமான சிதாரா கான் இங்கு தெரிவித்தார்.

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்த்ர சில்வா நியமிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைக்கான திணைக்களம் இலங்கைக்கான சலுகைகளை நிறுத்திவிட்டது.

அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மோசமான செயலாக தாம் கருதுவதாக குறிப்பிட்ட அவர் மாலி இராஜ்ஜியம் போன்ற நாடுகளில் கடமையாற்றிய இலங்கை அமைதிகாக்கும் இராணுவ வீரர்கள் அங்கு பிரச்சினைகளை சுமுகமாக முடித்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதேபோல இந்த விடயம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐக்கிய நாடுகள் காரியாலயத்தில் எழுத்து மூலம் விசாரணை செய்த போதும் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இவ்வறான செயல்களை ஐக்கிய நாடுகள் சபையானது இனிவரும் காலங்களில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என இலங்கை பிரதிநிதி இங்கு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையானது அரசியல் மயமாகாமல் அதன் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையின் பிரதிநிதியும் கனடாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகருமான சிதாரா கான் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.