இலங்கையில் இரகசிய சித்திரவதைக்கூடம்! வெளியாகின பல தகவல்கள்

Report Print Dias Dias in இலங்கை

வென்னப்புவ பகுதியில் இரகசிய சித்திரவதைக் கூடம் நடத்தி வந்த ‘ஒலு மார’ என்ற பிரதான சந்தேகநபரின் கைது நடவடிக்கையினை அடுத்து தற்போது அவரின் நண்பரான ரன்மா சாமார என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த பிரதான சந்தேகநபருடன் மேற்படி சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்த மேலும் 7 சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றதாக தெரியவருகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்த குழுவின் தலைவரான ஒலு மார சில தினங்களுக்கு முன்னர் ஹெரோயினுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரனாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஒலு மார தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது ஒலுமாரவின் கையடக்க தொலைபேசி சோதனையிடப்பட்ட போது அதில், அறையொன்றிற்குள் சிலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காட்சிகள் இருந்துள்ளன.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே, சித்திரவதைக் கூடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்தே பிரதான சந்தேகநபரின் நண்பரான ரன்மா சாமார கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக ஒரு கொலை, நபர்களை தாக்கியது மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிலாபம் மேல் நீதிமன்றம் மற்றும் மராவில நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கும்பலை விமர்சித்ததாக கூறப்படும் ஒருவர் ஒலு மாரவால் கடத்தப்பட்டு சிறிகம்பால சித்திரவதை அறையில் அடைக்கப்பட்டு கால்கள், கைகள் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்களுக்கு பயந்து பொலிஸாரிடம் முறையிடவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தி வரப்படுபவர்கள் காயப்படுத்தப்பட்டு காயங்களில் உப்பு, மிளகாய்த்தூய் தூவப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.