இலங்கை தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு

Report Print Dias Dias in இலங்கை

இலங்கையில், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் போலீஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை கடந்த 25ஆம் தேதி வலுக்கட்டாயமாக அடையாளம் தெரியாத சிலர் தடுத்து வைத்து சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுவிட்சர்லாந்து, இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை முக்கிய விடயமாக தாம் கருத்திற்கொள்ளுவதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரியுள்ளது.

ஊடக நிறுவனத்தில் திடீர் சோதனை

இலங்கையின் பிரபல செய்தி இணைய தளமான நியூஸ் ஹப் இணையத்தளத்தின் அலுவலகத்தை போலீஸார் நேற்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழு இந்த நிறுவனத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் தூண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து அவ்வாறான எந்தவொரு ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

- BBC - Tamil