இலங்கைத் தீவில் இரண்டு நாடுகளா? விளக்கம் அளிக்கும் பிரித்தானியா

Report Print Vethu Vethu in இலங்கை

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி மனிஸா குணசேகர தெரிவித்துள்ளார்.

கன்ஸர்வேட்டிவ் கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இவ்வாறான விடயத்தின் மூலம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறும் பிரித்தானிய பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் கன்ஸர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள 64 பக்கங்களைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைக்குள் இரண்டு நாட்டுத் தீர்வை வழங்குவதற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளவலியிடம் கடந்த 27ஆம் திகதி கருத்து கோரியதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கலி இலங்கை தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், இரண்டு நாட்டுத் தீர்வு இஸ்ரேல், பலஸ்தீன் நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் தற்போதுள்ள செயற்பாடுகளுக்கு மாத்திரமே ஆதரவு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.