அதிகாரிகளுக்கு இன்று ஜனாதிபதி விடுத்துள்ள அவசர உத்தரவு

Report Print Dias Dias in இலங்கை

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றறிக்கைகளையும், ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம் எனவும் அவ்வாறு காணப்படுமாயின் அவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு விடுத்துள்ளார்.

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுத்தப்படும் நிவாரண வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யும் சிறப்புக் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துள்ளார்.

முதலில் ராஜாங்கனை யாய 2 ஸ்ரீ துட்டுகெமுனு விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இடருக்குள்ளான மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதுடன், எந்தவொரு நபரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடாதென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இடர் நிலைமைகள் சீரானதன் பின்னர் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உரிய துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

விகாராதிபதி வண. மஹமான்கடவல தம்மசிறி தேரர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இராஜாங்கனை யாய 9 கெமுனுபுர ஸ்ரீ போதிராஜராம விகாரையிலுள்ள நலன்புரி நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் தகவல்களை கேட்டறிந்தார்.

அத்தோடு அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

விகாராதிபதி வண. இஹலமுல்லே சந்தஜோதி தேரரையும் ஜனாதிபதி சந்தித்து சுமூகமாக கலந்துரையாடினார்.