மட்டக்களப்பு - யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா வைரஸ்?

Report Print Dias Dias in இலங்கை

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்றைய தினம் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

வட.கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம், குருநாகல், கரகம்பிட்டிய, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

குறித்த பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலையில் அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் முல்லைத்தீவில் இருந்து ஒருவரும், கண்டியில் இருந்து ஒருவரும், வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவில் இரண்டு வாரம் தடுத்து வைத்து அவதானிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட 11 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அனுமதிக்கலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தத்தமது தனி நபர் சுகாதாரத்தை மக்கள் பேணிக்கொள்ள வேண்டும் என்பதுடன், உணவு விடயத்திலும், பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலும் அவதானமாக செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.