காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம்

Report Print Rakesh in இலங்கை

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை உடன் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும், காணாமல்போனோரின் உறவுகளுக்கான பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய பணியை செய்து வரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரை சந்தித்தேன்.

இலங்கையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

காணாமல்போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர், இவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் என்பதுடன் காணாமல்போனோரின் குடும்பத்தினர் அதற்கான சாட்சி எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை உடன் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.