இலங்கை படையினர் மீது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in இலங்கை

2009ஆம் ஆண்டு போரின்போது காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் அவர்களுக்காக போராடும் நடவடிக்கையாளர்களுக்கும் 2019இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கையின் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப்பிரிவினரும் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்த வகையில் காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் வடக்கு, கிழக்கின் 6 இடங்களில் நடவடிக்கையாளர்கள் செயற்படுகின்றனர்.

இவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதற்கு செல்வதற்கு முன்னர் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு சுமார் 6 இடங்களில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது எதற்காக இந்த கூட்டம் இடம்பெறுகிறது உட்பட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த கூட்டத்தை தாம் நிறுத்திவிட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலையை தெரிந்துக்கொள்ள பல வருடங்களாக காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்தபின்னர் படையினர் காணாமல் போனோர் உறவுகளை பயமுறுத்தி அவர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மனித உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

2005-2015 ஆண்டுக் காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதியே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவே அப்போதைய ஜனாதிபதியாக இருந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது பொறுப்புக்களை தவிர்க்கும் செயற்பாடாக பார்க்க வேண்டியுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்தப்படி காணாமல் போனோர் விடயத்தில் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் ஆசியப் பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.