ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இணை அனுசரணையில் இருந்து உடனடியாக விலகவுள்ள இலங்கை

Report Print Ajith Ajith in இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் உடனடியாக விலகிக் கொள்ளவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் 30-1, 40-1 யோசனைகளுக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை இது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உட்பட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த இரண்டு யோசனைகளுக்கும் இணை அனுசரணை வழங்குவது தொடர்பில் முன்னாள் அரசாங்கம் நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அனுமதியை பெறவில்லை என்ற விடயம் இங்கு கலந்துரையாடப்பட்டது.

குறித்த யோசனைகளின் படி ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்கல், ஹைபிரைட் நீதிமன்றத்தை அமைத்து போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை தண்டித்தல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகத்தை அமைத்தல் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன என்ற விடயமும் நேற்றைய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு அடுத்த வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் அரசாங்கத்தின் இந்த யோசனையை அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது என்றும் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கூடிய கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may like this video