அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான வேலைத்திட்டம்

Report Print Banu in இலங்கை

கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றைத் தயாரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மருந்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏனைய தொற்றா நோய்களுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஊரடங்குச் சட்டம் காரணமாக மருந்துகளைக் கொள்வனவு செய்வதில் சிரமமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைக்குத் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் இருப்பு எதிர்வரும் மாதங்களுக்குப் போதுமான அளவு மருந்துக் களஞ்சியங்களில் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மருந்துப் பொருள் உற்பத்தியின் பிரச்சினைகளைத் தீர்த்து, மருந்துப் பொருள் உற்பத்தியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் தற்போது நாட்டில் காணப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின் இருப்பு தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் காணப்படுவது தொடர்பாக அரசின் தலையீடு அவசியம் எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.