பொய்யான வரலாற்றால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கை அரசியல்

Report Print Dias Dias in இலங்கை

புத்தரின் தர்மகோட்ப்பாட்டை நிலைநிறுத்த புனையப்பட்ட கதைகளே இனவழிப்புக்கு வித்திட்டுள்ளது என தொல்லியல் துறை மாணவன் மயூரன் (MA) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கூட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரலாற்றின் சில நல்ல நிகழ்வுகள் பாதகமான விளைவுகளைத் தருவதுமுண்டு வரலாற்றுப்போக்கில் எழுகின்ற எழுச்சிகள் என்பது அவற்றின் நீண்டகால விளைவுகளினாலேயே எடைபோடப்பட வேண்டும்.

அந்தவகையில் இலங்கையின் பௌத்தம் பஞ்சசீலக் கொள்கையின்அடிப்படையில் கட்டி வளர்க்க முற்பட்டாலும் புத்தரின் தர்மக்கோட்பாடை நிலைநிறுத்த புனையப்பட்ட கற்பனைக் கதைகள் பின்னாளில் இனவழிப்பையும் பேரினவாதத்தைத் தூண்டி வளர்க்க உதவிற்று என்ற உண்மை மிகக் கசப்பானதே.

அந்தவகையில் பௌத்த தர்மத்தை நிலைநிறுத்த மகாவம்சம் உருவாக்கி தம்மதீபக் கோட்பாடு எவ்வகையான இன முரண்பாடுகளையும், இனவழிப்பையும் செய்துகொண்டிருக்கின்றது என நோக்குவது அவசியமானது.

தர்மசீலத்தைப் பரப்புவதற்காக மகாவம்சத்தில் முற்பகுதியில் புனையப்பட்ட கற்பனைக்கதைகள் பின்னாளில் மனிதகுலத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து இன்றுவரை அதை நியாயப்படுத்திவருவதை எம் கண்முன்னே பார்க்க முடிகிறது.

இலங்கை அரசியலானது விஜயனது பொய்யான வரலாற்றில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. விஜயன் இலங்கைக்கு வரும்போது இலங்கையில் நாகரிகமற்ற மக்களும், அரசும் இல்லை என்றும் மகாவம்சம் கூறுகிறது. ஆனால் அண்மைய தொல்லியல் ஆய்வுகள் விஜயனின் காலத்திற்கு முன்னர் இலங்கையில் பல அரசுகள் இருந்தது என்பதனை நிரூபிக்கின்றது.

உதாரணமாக கந்தரோடை ஆய்வுகள், 2011 இல் நடைபெற்ற யாழ்.கோட்டை , வவுனிக்குளம், கிழக்கு மாகாணத்தில் பரவலாக நடாத்திய ஆய்வுகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.

அத்துடன் விஜயன் வங்காள தேசத்திலிருந்து படகில் இலங்கை வரும்போது 'சுப்பிரகா" என்கின்ற துறைமுகத்தில் தங்கிவிட்டு மீண்டும் படகிலேறி வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.

இந்த சுப்பிரகா துறைமுகம் மும்பைக்கு கீழ் இருக்கிறது. அதாவது இந்தியாவின் மேற்கு திசையான வங்காள தேசத்திலிருந்து புறப்பட்டவன் இந்தியாவின் கிழக்குத்திசையான சுப்பிரகாவில் தங்கி மீண்டும் வருகின்றான் என்று மகாவம்சம் கூறுவதானது நம்பமுடியாத பொய்யாகும்.

இப்பொய்யின் மீதுதான் இலங்கை வரலாறு மட்டுமல்ல அரசியலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கபிலவஸ்துவில் புத்தர் உண்ண உணவின்றி உடல் மெலிந்து தன் கொள்கைகளைப் பரப்ப முடியாமல் சாக கிடந்தபோது ஒருபெண் உணவு கொடுத்து அவரைக்காப்பாற்றி புத்தர் தம் போதனைகளை மேற்கொள்ள வழி செய்தாள்.

புத்தர் தன் வாழ்நாளில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லவே முடியாத நிலையில் இருந்தபோது எவ்வாறு 2200 மைல்கள் தாண்டி இலங்கை வந்திருக்க முடியும் ? இதுவும் ஒரு பொய்யான வரலாற்றில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியலுக்கு சான்றாகவே அமைகிறது.

வட இந்தியாவில் கி.மு 5ஆம் நூற்றாண்டில் புத்தரின் மதம் தோன்றியிருந்தாலும் கி.மு 3ஆம் நூற்றாண்டிலேயே அசோகனினால் இந்திய உபகண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவியது. ஆனால் கி.பி.6ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சிபெற்ற சைவ, வைணவ மதங்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியாவில் பௌத்தம் மறையத் தொடங்கியது.

இதனால் இந்தியாவிலிருந்தும் பௌத்தத்தைத் தழுவிய பிக்குகள் அங்கிருந்து புலம்பெயர்ந்து இலங்கையை வந்தடைந்து சிங்கள பௌத்தர்களுடன் இணைந்தனர். இந்த வரலாற்றுப் போக்கினைக் கண்ட பிக்குகள் வரலாற்று ரீதியில் புத்தருக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு பற்றி புத்தரே சொன்னதாக மகாவம்ச நூலினை எழுதி தம்மதீபக் கோட்பாட்டினை நிலை நிறுத்தினர்.

புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியே இலங்கை என்ற கருத்தியலை வேரூன்றச் செய்தனர். தனது சமயம் பரிசுத்தமாக பாதுகாக்கப்படுவது இலங்கையில் தான் என் புத்தர் ஒரு போதும் சொல்லவில்லை.

புத்தர் ஞானம்பெற்ற நாளிலேயே விஜயன் இலங்கையில் வந்திறங்கியதாகவும், இலங்கையில் விஜயன் கால்பதித்தபோது நிலம் சிவப்படைந்திருந்ததாகவும், புத்தர் தனது மதநெறியை இலங்கையே சிறப்பாகக் கடைப்பிடிக்கும் என நினைத்திருந்ததாகவும் எழுதி பௌத்த மதத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கைக்கென புவிசார் நலன்களை மையப்படுத்தி தம்மதீபக் கொள்கையை பிக்குகள் இலங்கையில் பிரகடனப்படுத்தினர்.

மகாவம்சத்தின் இந்தப் பிரகடனம் ஒரு வரலாற்றுப் பிரச்சனையாக வடிவெடுத்து இன்றுஅரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் அம்சமாக மாறி இந்திய விரோதப் போக்காக வளர்த்தெடுக்கப்பட்டதற்கு இந்த தம்மதீபக் கோட்பாடுகளே காரணமாகிவிட்டது.

அடுத்து கி.பி.5ஆம் நூற்றாண்டில் மகாநாமதேரரினால் எழுதப்பட்ட மகாவம்சத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சமயப்பற்றுடையோர் பேரின்பம் பெறுவதற்கு இயற்றப்பட்டது என தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் எல்லாள மன்னன்பற்றி கூறும்போது சோழநாட்டிலிருந்து வந்து ஆட்சியை கைப்பற்றியவனாகவும், நீதிதவறாது ஆட்சிபுரிந்தவனாகவும், அனுராதபுர மன்னர்கள் கடைப்பிடித்த மரபுகளை தவறவிடாது கடைப்பிடித்து பௌத்த சங்கத்துக்கு ஆதரவு வழங்கினான் என்று எடுத்துரைக்கின்றார்.

பொதுவாக துட்டகெமுனு - எல்லாளன் போர் மகாநாமதேரர் கூறும் போர் வர்ணணையின் மொழிஅமைப்பு முறைமையை விட நீண்ட காவியத்தன்மை கொண்ட நடையுடன் காணப்படுவதனால் மகாநாம தேரரின் பின்னர் வேறொருவரால் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டு தமிழருக்கு எதிரான முறையில் சிறப்பாக சிங்கள மக்கள் மனதில் தமிழருக்கு எதிரான நிலையை உருவாக்குவதற்கு புனையப்பட்டிருக்கிறது.

துட்டகெமுனு முதலில் தன்னுடைய குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். தனது இளைய சகோதரன் திஸ்ஸவுடனேயே போர்தொடுத்து தனது முடியைத் தக்கவைத்துக் கொண்ட பின்னரே சிற்றரசுகளுக்கெதிராகவும், எல்லாளனுக்கெதிராகவும் போர் தோடுத்தான்.

குறிப்பாக எல்லாளன் - துட்டகெமுனு போரை 1942 களில் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்றின் முதலாவது பாகத்தில் சிங்கள வரலாற்றாசிரியர் செனரத் பரணவிதான எழுதும்போது போது அன்னியர் ஆதிக்கத்திலிருந்து சிங்களரை விடுவிக்க நடத்தப்பட்ட ஒரு விடுதலை இயக்கப் போர் என்று எழுதியுள்ளார்.

அக்காலத்தில் ஆட்சியாளர்களைப் போல் வெறும் ஆள்நிலம் பெறுவதற்கு ஏற்பட்ட போரே அப்போராகும். ஆனால் அன்னியராட்சியிலிந்து விடுதலைபெற சிங்கள மக்கள் காத்திருந்த ஒரு ஆட்சிக்காலமாக எல்லாளன் காலத்தை மகாநாமதேரர் வர்ணிக்கவில்லை.

ஆனால் மகாவம்சம் குறிப்பிட்ட இந்த போரின் மனோ நிலையில் இருந்து வரலாற்றை திரித்தும் அரசியல் தேவைகளுக்காக பிழையாகவும் எழுதப்பட்டதனால் காலங்காலமாக அம்மண்ணில் வாழ்ந்த தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடியேறிகள் என்று புனையப்பட்டன.

இதற்கு வேறோர் காரணமும் உண்டு. கி.பி.3ஆம் நுற்றாண்டில் கோதாபாயன் ஆட்சியில் இலங்கையில் நடைமுறையில் இருந்தது தேரவாத பௌத்தமே இந்த தேரவாத பௌத்தத்தின் தலைமை பிக்குவாக இருந்தவர் காவிரிப்பூம்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழ் பிக்கு சங்கபாலர் என்பவரே.

அப்போது காஞ்சியிலிருந்து வருகை தந்த மகாஞான தமிழ்ப்பிக்குவான சங்கமித்திரர் அபயவிகாராயில் இருந்த சங்கபாலரை வாதத்தில் வென்று அவரை தமிழகத்திற்கு நாடு கடத்துகிறார். பின்னர் கோதாபாயனின் அரசவையில் அவன் மகன்களான ஜோட்டதீசன்,மகாசேனன் ஆகியோரின் ஆசானாகி அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் போது மகாசேனன் மீது காட்டிய அதிக அன்பு ஜோட்டதீசனை கோபம் கொள்ள வைக்கிறது.

இதனால் கோதாபாயன் இறக்க ஆட்சிபீடம் ஏறிய ஜேட்டதீசனிடம் இருந்த தப்ப கந்தரோடையில் தஞ்சமடைந்துவிட்டு ஜோட்டதீசன் இறக்க மீண்டும் அனுராதபுரம் வந்து மகாசேனனுக்கு முடிசூட்டி மகாஞானபௌத்ததை பரப்புகிறார் சங்கமித்திரர்.

இதன்மூலம் இலங்கையில் மகாஞான பௌத்தம் பரவுகிறது. இதைப்பொறுக்காத தேரவாதபௌத்ததைச் சேர்ந்த மகாசேனனின் மனைவிகளில் ஒருத்தி சங்கமித்திரரைக் கொலை செய்கிறாள். இதுவும் இந்தியா மீதிருந்த வெறுப்பரசியலை ஈழத்தமிழர் மீது இனவெறியாக காட்டுவதற்கு காரணமாக அமைந்தன எனலாம்.

முக்கியமாக எல்லாளன் துட்டகெமுனு போரில் எல்லாளனைக் கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தினை போக்குவதற்கு பிக்குகளிடம் பிராயச்சித்தம் தேடுவதற்காக கேட்டபோது போரில் பகைவரைக் கொல்வது பாவமில்லை.

அதேபோல் பிற வழிபாட்டு முறைகளை கடைப்பிடிப்பவர்கள் இழிகுலத்தவர்கள், விலங்குகளுக்கு ஒப்பானவர்கள், இவர்களைக்கொல்வது பாவமில்லை என்று துட்டகெமுனுவை சமாதானப்படுத்துகின்றார்கள் எனமகாவம்சம் கூறுவதாக கூறுகின்றனர். இது வில்லியம் கெய்கர் மொழி பெயர்த்த மகாவம்சத்தில் இல்லை.

ஆனால் பின்வந்த மகாவம்சத்தில் இருக்கிறது. இதிலிருந்து மகாவம்ச மனநிலையில் பின் வந்த பரணவிதானவால் திட்டமிட்டு இப்பகுதிகள் செருகப்பட்டு தமிழ் மக்களைக் கொல்வதில் பாவமில்லை என்கின்ற கருத்தினை சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலும் பரப்பி அவர்களுக்கு இனவாதக் கருத்துக்களைத் திணித்து இலங்கை அரசியலை ஒரு இனவாத அரசியலாக மாற்றி இத்தனை அழிவுகளுக்கும் காரணமாகிவிட்டார்.

மகாவம்சம் 'யுத்தத்தின் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலி வேசமாகவே காட்டுகிறது. இந்த நம்பிக்கையை வலுப்படுத்த மகாநாமதேரர் காலத்திலிருந்து இன்றுவரை வளர்க்கப்படுகிறது.

இதுவே முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம்முறவுகளுக்கு ஒரு இரங்கலைத்தானும் வெளியிடவில்லை சிங்கள மக்களோ,புத்திஜீவிகளோ; இது பொய்யான வரலாற்றால் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றால் வந்தது.

மேலும் புத்தர் உயிரைக்கொல்வது பாவம் அப்பாவத்திலிருந்து எந்த முறையிலும் வெளியேறமுடியாது என 'சங்யுத்த நிகாயாவில் வருகின்ற யோகஜீவ சூத்திரத்தில்"குறிப்பிடுகிறார். அதில் யோகஜீவ என்னும் கிராமத்தலைவன் புத்தரிடம் யுத்தத்தில்மரணிப்போர் தேவலோகம் அடைவார்களா?, யுத்தத்தில் கொலை செய்தவன் தேவலோகம்அடைவானா,? என்று மூன்று தடவைகள் கேட்க பதில் சொல்லாது மௌனம் காக்கிறார்.

மீண்டும் அவன் கேட்டதனால் புத்தர் 'யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும் எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் நரகத்தில்தான் பிறப்பார் . யுத்தத்தில் நடப்பது இதுதான் இதில் எந்தவித மாற்றமோ சிறப்போ கிடையாது" என்கிறார். இங்கு புத்த மதத்தைக் காப்பதற்காக இறப்பவர் சொர்க்கம் அடைவர் என்று புத்தர் எப்போதும்சொல்லவில்லை.

திரிபீடகத்தில் உயிர்களைக் கொல்வது பாவம் எனச்சொன்ன புத்தரைக் கொன்று மகாநாமதேரர் போரில் உயிர்களைக் கொல்வதில் பாவமில்லை என பௌத்த பிக்குகள்சொல்வதாக கூறி பாவமில்லா யுத்தம் என்ற பொய்யை உருவாக்கி மகாவம்சத்தில் ஒருபுதிய புத்தரை தோற்றுவித்துமுள்ளார்.

உண்மையில் மகாநாம தேரர் இதுவரை நடைமுறையில் இருந்த புத்தக் கொள்கைகளைச் சிதைத்துவிட்டு கி.பி.5ஆம்நூற்றாண்டில் புத்த சமய தர்மத்தை புதிதாக எழுதியது மட்டுமன்றி அது யுத்தம் சார்ந்த புத்த மதத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் புதிய யுத்த வெறிபிடித்த இனவாதப் புத்தனையும் உருவாக்கி மகாவம்ச பௌத்தமாக மகாவம்ச புத்தனாக கௌதம சித்தார்த்த புத்தரிலிருந்து மாற்றியமைத்தார்.

திரிபீடகம் கூறும் அன்பும், கருணையும் காட்டும் புத்தர் போலன்றி மகாவம்சத்துப் புத்தர் பெரும் தந்திரத்துடனும், இனக்குரோதத்துடனும், இரத்தவெறியுடனும் காணப்படும் புத்தனாக உருவாக்கி இன்றைய ஈழத்தமிழர்களின் இழிநிலைக்கு காரணமாகிவிட்டார்.

மகாவம்சம் புத்தசமயம் இலங்கைப் பௌத்தர்களின் பூமி என்றும்,பௌத்தரல்லாத ஏனையோரை யுத்தம் செய்து கொல்வதில் குற்றமில்லை எனவும் கூறும் பொய்யினால் தமிழர் - சிங்களவர் ஒற்றுமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளனர் மகாவம்ச மனநோய் பிடித்தவர்கள்.

காலம்காலமாக தமிழகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கள் மகாவம்ச மனநோயாளர்களை தமிழர்களுக்கு எதிராக திரும்புவதற்கு வழிசமைத்துள்ளது. உதாரணமாக மகாநாமதேரரின் மருமகனான தாதுசேன மன்னன் 30 ஆண்டுகள் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கையை அவர்களிடமிருந்து மீட்டே ஆட்சிக்கட்டில் ஏறினான். இதனால் இயல்பாக இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கு காரணமாக இருந்தது எனலாம்.

மேலும் சோழர்களின் காலத்தில் ராஜராஜசோழனின் தமயனான ஆதித்த கரிகாலனை கொல்வதற்கு சிங்கள மன்னர்களுக்கு பங்கு இருந்ததாகவும், ராஜராஜனின் மகளை அவனிடமிருந்து பிரித்ததில் சிங்கள மன்னர்களுக்கு பங்கு இருந்ததாகவும் இதனால் தான் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்த பின்னர் தன் தமயன் சதிக்கு காரணமான கேரளாவில் உள்ள காந்தளுர்சாலை மீதும், அனுராதபுரம் மீதும் படையெடுத்து இரண்டு நகரங்களையும் அழித்தான்.

கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் நிலைத்து நின்ற தலைநகர் அழிந்து தரைமட்டமாகிய கோபம் இந்தியா மீதும், சோழர்கள் தமிழர்கள் என்பதனால் அவர்கள் மீதும் திரும்பியது.சோழர்களின் பின்னர் வன்னியில் சோழப்படை அங்கங்கே தங்கியிருந்தஆட்சிபுரிந்தமையும் தமிழர் வெறுப்பு அரசியலுக்கு காரணமாக அமைந்தது.

12 ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த நிசங்க மல்லன் தான் சிங்கள பௌத்தன்அல்லாதவன் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நடைமுறையைக் கொண்டு வந்தவன். இவன் நிசங்கேஸ்வரா என்ற கோயிலைக் கட்டியதாகவும் கூறுவர். இவனை கலிங்க மன்னன் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.

1400 ஆண்டுகால அனுராதபுர ஆட்சிக்காலத்தில் எந்த மதத்தைத் தழுவியிருந்தாலும் ஆட்சிக்கு வரும்போது பௌத்த மதத்தைத் ஆதரித்தால் ஆட்சிப்பீடமேறி ஆட்சி செய்யலாம் என்கின்ற நடைமுறை இருந்தது. இது நிசங்க மல்லன் ஆட்சியுடன் மாறுகிறது.

இவனே முதன் முதலில் பௌத்தனாக இருந்தால் மட்டுமே ஆட்சிப் பீடமேறலாம் என்கின்ற நடைமுறையைக் கொண்டு வந்தவனாவான். இவன் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய முதலாம் பராக்கிரம பாகுவின் மருமகனாவான்.

அத்துடன் 1215 இல் வன்னியிலிருந்து படையெடுத்து சென்ற மாகன் சிங்கள அரசை றுகுணு வரை ஓடச் செய்ததோடு பொலநறுவையில் ராசதானி அமைத்து ஆட்சிசெய்ததோடுஅங்கிருந்த பௌத்தக் கோயில்களையும் அழித்தான் என்கிறது சிங்கள வரலாற்று நூல்கள்.

மகாவம்சத்தில் மட்டுமல்ல பெருமளவு சிங்கள நூல்கள் சிங்கள தமிழ் யுத்தம் பற்றியே கூறுகிறது. தமிழ்- சிங்கள நட்புறவினால் ஏற்பட்ட நன்மைகள் பற்றி மிகமிகக் குறைவாகவே கூறியிருக்கின்றது.

ஆனால் இலங்கையில் தேரவாதம், மகாஞான பௌத்தங்களைக் கட்டி வளர்த்ததிலிருந்து அதை மறு சீரமைத்து சிங்கள மொழி உருவாவதற்கு பாடுபட்டது முதல் கொண்டு சிங்கள இலக்கண நூலான 'சிதற்சங்கிராவ"வருவதற்கும் காரணமானவர்கள் தமிழர்களே. குறிப்பாக பௌத்தம் 7 மறுமலர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அதில் 4 மறுமலர்ச்சிகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்களே இவையனைத்தும் மறைக்கப்பட்டு பொய்யான வரலாறு புனையப்பபட்டு இலங்கை அரசியல் கட்டப்பட்டுள்ளது.

கண்டியின் இறுதி மன்னர்களான நான்கு நாயக்க மன்னர்களில் இறுதி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும்பெருந் தொண்டாற்றினான். அவனது பணிகளே இன்று பௌத்தமும், அதன் சாசனமும் பேணப்பட்டு சிறப்புடன் இருக்க காரணமாகியது. இப்படிப்பட்ட மன்னனை 1815 இல்ஆங்கிலேயர்களுக்கு பிலிமத்தலாவையும், பிக்குகளும் இணைந்து காட்டிக் கொடுத்தனர்.

பௌத்தத்திற்கு பணி செய்திருந்தாலும் இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்ற உட்பகையும், இவன் தமிழன் எண்ணமுமே இவனைவிட ஆங்கிலேயர்களாட்சியில் இருப்போம், ஆனால் தமிழனாட்சியில் இருக்க நாங்கள் தயாரில்லை என்ற பிக்குகளின்நிலைக்கு பொய்யான வரலாற்றால் கட்டியமைக்கப்பட்ட அரசியல் வரலாறே காரணமாகியது.

19.05.1934 ஆண்டு பௌத்த மகாசங்கம் அமைக்கப்பட்டது. இதன் ஸ்தாபகர்களில் ராஜபக்சவின் தகப்பனான டீ.எம்.ராஜபக்சவும் ஒருவர். இந்த பௌத்த மகாசபையின்ஆரம்பம் பற்றி லக்மின பத்திரிகைக்கு பண்டாரநாயக்க வழங்கிய பேட்டியில் பிளவுபட்டுப் போயுள்ள சிங்கள இனத்தையும் மதத்தையும் ஒன்று சேர்த்து சிங்களதேசத்தின் தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இதனை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கம்தான் சிங்கள மகாசபையை அமைப்பதன் அவசியம் என்றார்.

இது பொய்யான வரலாறால் எப்படி இலங்கை அரசியல் தமிழருக்கு எதிராக திரும்பியது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

இதன்பின்னர் 1940 களின் இறுதிப்பகுதியில் சிங்கள ஆய்வாளர் பரணவிதானவால் வேண்டுமென்று பல தகவல்கள் மாற்றப்பட்டன. இதில் எல்லாளன் சமாதியும் ஒன்றாகும்அதாவது 1946 ஆண்டுவரை துட்டகெமுனுவால் எல்லாளனுக்கு அமைக்கப்பட்ட சைத்தியம் எனப்படும் சமாதியின் முன்னர் செல்பவர்கள் இறங்கி மரியாதை செய்து சென்றனர்.

இது கண்டிய மன்னனை காட்டிக் கொடுத்த பிலிமத்தலாவை வரை நிகழ்ந்தது. 1948இல் இந்த இடத்தில் இருப்பது எல்லாளன் சமாதியல்ல துட்டகெமுனுவின் சமாதி என வரலாற்றை மாற்றிப் போட்டார். இதனால் இவ்விடம் தோண்டப்பட்டு இதிலுள்ள எரிக்கப்பட்ட கரிகள் ஒரு பேப்பரால் சுத்தப்பட்டு பேணப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

1980 இல் கலாச்சார அமைச்சராக இருந்த ஹருவில்ல பரணவிதானவை விட இன்னுமொரு நாடகத்தை அரங்கேற்றினார். தூசு பிடித்திருந்த அந்தச் சாம்பலை பிரான்ஸ் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி ஆய்வுசெய்தனர். அது 2000 வருடங்கள் பழமையானது என பிரானஸ்அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ரிப்போட் கொடுத்து விட்டதாக அறிவித்தது அரசாங்கம், ஆனால் அந்த ரிப்போட் யார் கண்ணிலும் காணவும் இல்லை. அந்த சாம்பல் கொழும்பு வந்தவுடன்அனுராதபுரத்திலிருந்து பேப்பரில் சாம்பலாக சென்ற அஸ்தி அரச அங்கீகாரத்துடன் குண்டுதுளைக்காத கண்ணாடியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

துட்டகெமுனுவின் புகழ் மகாவம்சம் நினைத்தது போல் சிங்கள மக்கள் மனங்களெங்கும் பரவியது. ஒரு பெய்யான வரலாறு எப்படி அரசியலுக்குள் செல்வாக்கு செலுத்தியது என்பதற்கு இது தக்க சான்று. தற்போது இந்த இடம் துட்டகெமுனுவின் சமாதியாக இலங்கை அரசு மாற்றியுள்ளது. 1946 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 2200 ஆண்டுகள் எல்லாளனது சமாதியாக பேணப்பட்ட சமாதி தற்போது துட்டகெமுனுவின் சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது.

போரின் பின்னர் வன்னிப் பிரதேசமெங்கும் காணப்படும் தமிழ்ப் பௌத்த தடயங்களையும், தமிழர்களின் தொல்லியற் பொருட்களையும் இலங்கையின் பௌத்த தடயங்கள் என கூறிக்கொண்டு அவற்றையும் நாட்டின் மரபுரிமைப் பொருட்கள் அத்தனையையும் பாதுகாப்பமைச்சு தற்போது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதானது பொய்யான வரலாற்றால் கட்டமைக்கப்பட்ட வரலாறு இன்றைய அரசியலை எவ்வகையில் மாற்றியிருக்கிறது.

தற்போது நவீன மரபணுவியல் ஆய்வுகள் வந்திருக்கிறது. அவை எவற்றையும் சிங்கள பௌத்தம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட மரபணுவியல் ஆய்வுகள் மகாவம்சத்தினையும், விஜயனின் வரவுபற்றிய புனைவுகளையும் தகர்த்திருக்கும் சூழலில் அந்த ஆய்வையே இலங்கை அரசு தடை செய்திருப்பதோடு அது தனது பழைய மகாவம்ச மனநோயிலிருந்து மாறாமல் மகாவம்சத்தினை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த கோட்டாபயவினால் மகாவம்சத்தின் 6வது தொகுதி வெளியிட்டும் வைக்கப்பட்டிருப்பதோடு அவர் பதவி ஏற்ற நிகழ்வும் துட்டகெமுனு கட்டிய றுவான்வெலிசாய விகாரையில் நிகழ்த்தியதானது பொய்யான வரலாற்றிலேயே இலங்கை அரசியல் கட்டமைக்கப்பட்டதோடு மட்டுமல்ல அதன் மனநோயிலிருந்தே தமிழர்கள் மீதான இனவழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பெரும் சாபமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.