வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 4500 பேர்

Report Print Steephen Steephen in இலங்கை

இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

மேலும் 41 ஆயிரம் பேர் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் படிப்படியாக இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்திற்கு இணங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், இந்தோனேசியா, ரஷ்யா, பங்களாதேஷ், கத்தார் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மே 21 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகள் இலங்கை அழைத்து வரப்பட உள்ளனர்.

இதன் பின்னர் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு நாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை குறுகிய கால விசா அனுமதியில் சென்றுள்ள 4 ஆயிரத்து 40 இலங்கையர்கள் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை அழைத்து வர விசேட விமானங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.