ஊரடங்கு தளர்த்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் இரண்டு கிழமையால் தான் தெரியவரும்! முரளி வள்ளிபுரநாதன்

Report Print Sujitha Sri in இலங்கை

தற்போது நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் இரண்டு கிழமையால் தான் தெரியவரும் என விசேட வைத்திய நிபுணரும், சுகாதார அமைச்சின் சமுதாய வைத்திய நிபுணருமான முரளி வள்ளிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இன்றைய தினம் வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வது என்பது சிக்கலான ஒன்றாகவே காணப்படுகிறது.

இந்த முறை இருப்பது நல்லது. ஆனால் சில இடங்களில் சில நடவடிக்கைகள் நோய் பரவலை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

உதாரணமாக மதுபானக் கடைகளை திறந்தமை. மதுபான கடைகள் திறக்கப்பட்ட அன்றே எல்லாரும் போய் வரிசையில் முட்டிமோதிக் கொண்டு நின்றனர்.

அவர்களுக்கிடையில் ஒரு மீட்டர் இடைவெளி பேணப்படவும் இல்லை. முக்கால்வாசி பேர் முகக்கவசங்களும் அணியவில்லை.

அதேநேரம் இந்த ஊரடங்கு சந்தர்ப்ப காலத்தில் பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. மதுபானத்தை அருந்தி விட்டு குடும்ப உறுப்பினர்களிடம் வன்முறையில் ஈடுபடும் நடவடிக்கை காணப்படுகிறது.

அதேவேளை மதுபானம் அருந்தியவரால் தாக்கப்பட்ட மனைவியோ, பிள்ளைகளோ அல்லது வேறு நபர்களோ தற்கொலைக்கு முயற்சிக்கும் சூழ்நிலைகளும் காணப்பட்டன.

இதேவேளை சில நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனேயே மதுபானம், புகைப்பிடித்தல் என்பவற்றை முற்றாக தடை செய்திருந்தன.

ஒருவேளை மதுபானம் அருந்தும் நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் அவரால் எல்லாருக்கும் இந்த தொற்று பரப்பப்படும்.

அதேநேரம் ஊரடங்கு சட்டத்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போடுவது, விடுமுறை நாட்களில் போடுவது என்பது எந்தளவு பிரயோசனமானது என்பதில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன.

ஆனால் எப்படியென்ற போதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலைமைகளினால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் இரண்டு கிழமையால் தான் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.