ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

Report Print Ajith Ajith in இலங்கை

ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக, முஸ்லிம் மதவிவகார மற்றும் கலாச்சார திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பணிப்புரைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டதிலிருந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் தக்பீர் சொல்ல முடியும். இமாம் மற்றும் முஅத்தின் தவிர்ந்த எவரையும் பள்ளிவாசலில் நுழைய அனுமதிக்க கூடாது.

சுற்றுச்சூழலிலுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாற்று மதத்தவர்களுக்கு தொந்தரவில்லாதவாறு தக்பீர் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீட்டிலிருந்தவாறு பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது என்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் தக்பீரை தொடர்ந்து ஒலி பெருக்கியை பயன்படுத்த முடியும்.

பள்ளிகளிலோ வேறிடங்களிலோ கூட்டு தொழுகைக்கு அனுமதி இல்லாததன் காரணமாக, தத்தமது குடும்பத்தாருடன் மாத்திரம் தத்தமது வீடுகளில் பெருநாள் தொழுகையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஊரடங்கு அமுலில் இருந்தால் மையவாடிகளை தரிசிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டப்படல் வேண்டும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பின் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்தவாறு கொரோனா விதிமுறைகள் பேணப்பட்டு மையவாடி தரிசிப்பு இடம் பெறலாம். ஆனால் கூட்டம் கூட்டமாக செல்வது தவிர்க்கப்படல் வேண்டும்.

பொது ஒன்று கூடல்களுக்கு அனுமதி இன்மையால், நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்கான ஒன்று கூடல்கள் உட்பட எல்லாவகையான ஒன்றுகூடல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நிவாரண உதவினை விநியோகிப்பதற்காக ஒன்று கூடல்கள் தேவையென்றிருந்தால் பொலிஸாரினதும் பொது சுகாதார அதிகாரியினுடையதும் அனுமதி பெற்றிருப்பதுடன் அவர்களது கண்காணிப்பின் கீழேயே அவை இடம்பெற வேண்டும் என்று வக்பு சபை கோரியுள்ளது.