இலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் தடுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரம்! ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் என்று கூறப்பட்டு இந்த கருத்துச் சுதந்திரத்தன்மை குறைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எந்தவொரு நடவடிக்கையும் நியாயத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் கைது செய்யப்படுவர் என இலங்கையின் பொலிஸ் உதவி அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அரச அதிகாரிகள் தொடர்பில் விமர்சனம் செய்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறியிருப்பதை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கண்டித்திருந்தது.

இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பேஸ்புக்கில் இடம்பெற்ற பதிவுகள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இது கவலையை ஏற்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இது அரசாங்கத்துக்கு எதிரான செய்திகள் விடயத்திலும் பின்பற்றப்படுவது ஏற்கக்கூடியதல்ல என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றமை தடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஆணையாளர் பெச்சலெட், எனினும் அது சிறுபான்மையின சமூகத்தினரை நோக்கி எதேச்சதிகாரமாக மேற்கொள்ளப்படக்கூடாது என்று கோரியுள்ளார்.