தேர்தல் விடயத்தில் இலங்கை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி

Report Print Ajith Ajith in இலங்கை

தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் அரசியல் லாபம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அமைதியான சபை மற்றும் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர் க்ளெமென்ட் என் வோல்வ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஜூலை 18 முதல் 26 வரை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்த அவர் மனித பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு சென்றபோது ஜனநாயகத்துக்கு தமது பயணம் வலுவூட்டும் என்று தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக சிறப்பு அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவகையில் ஜனநாயகமயமாக்கல், நல்லாட்சி, மோதலுக்கு பிந்தைய நல்லிணக்கம் மற்றும் இடைக்கால நீதி தொடர்பான சில முக்கிய சாதனைகளை இலங்கையில் காணமுடிந்தது.

எவ்வாறாயினும், நிர்வாக மட்டத்தில் சட்டங்களை இயற்றுவதில் மறுப்பு உள்ளிட்ட விடயங்களில் பிரச்சினைகளை காணமுடிந்தது.

அத்துடன் இன மற்றும் மத பாகுபாடு, மாகாண அதிகாரிகளின் மீதான அவநம்பிக்கை மற்றும் சில பகுதிகளின் கடும் இராணுவமயமாக்கல் ஆகியவை ஜனநாயகத்துக்கான பாதிப்புக்காக இருந்தன.

இந்தநிலையில் தமது இலங்கை பயணத்துக்கு பின்னர் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.

இதனைடுத்து ஆறு மாதங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போது சூழல் மாறிவிட்டதை எண்ணி தாம் கவலைக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, இந்த விஜயத்தின் போது, 2016ஆம் ஆண்டில் தன்னார்வ தொண்டு செயலகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து தேசிய ஒருங்கிணைப்பு, அதிகாரப்பூர்வ மொழிகள் அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

எனினும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விவகாரங்கள் ஒரு தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் டிசம்பர் 10, 2019 அன்று தன்னார்வ தொண்டு செயலகம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 'பொது மக்களுக்கு சிரமமாக இருக்கிறது' என்பதற்காக அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவது ஒரு ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் மற்றும் முக்கியமாக இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கி, ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை' கட்டியெழுப்ப ஜனாதிபதி பணிக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை ஏற்புடையதல்ல என்பது அறிக்கையாளரின் கருத்தாகும்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பழிவாங்கல்களையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடாது என்று க்ளெமென்ட் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.