நியோமால் ரங்கஜீவவை கண்டித்துள்ள ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையின் செய்தித்தாள் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸ் அதிகாரியான நியோமால் ரங்கஜீவ அச்சுறுத்தியமை குறித்து ஐஎப்ஜே என்ற ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஊடகவியலாளர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

2012ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையின் முதல் பிரதிவாதியான நியோமல் ரங்கஜீவ, நீதிமன்றத்துக்கு சென்றபோது அவரை புகைப்படம் எடுத்தமைக்காக குறித்த ஊடகவியலாளர் ரங்கஜீவவினால் உடல்ரீதியான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதன்பின்னர் நீதிமன்ற பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட குறித்த ஊடகவியாளரின் புகைப்படக்கருவியில் இருந்து புகைப்படப்பதிவு அட்டையை பொலிஸார் அகற்றியுள்ளனர். இது இலங்கையில் முதல் தடவையாக இடம்பெறும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவம் அல்ல.

இந்தநிலையில சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தவேண்டும் என்று ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கோரியுள்ளது.