வடக்கு - கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் இறுதி நேர தேர்தல் கணிப்பீடு? வெற்றி யார் பக்கம்..

Report Print Gokulan Gokulan in இலங்கை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வெற்றி பெறும் கட்சிகளில் ஆசன ஒழுங்குகள் இறுதி நேர தேர்தல் முடிவுகளில் இவ்வாறு அமையலாம் என அரசியல் அவதானி கே.பி.டயஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடியவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களில் வன்னி மாவட்டத்தில் 2 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும், யாழ் - கிளிநொச்சி மாவட்டத்தில் 2, அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கின் கணிப்பீட்டு அறிக்கையிலேயே அரசியல் அவதானி கே.பி.டயஸ் அவர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் மக்களின் அரசியல் ஈடுபாட்டையும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கொள்கைகளையும் அடிப்படையாக வைத்து இக்கணிப்பை மேற்கொண்டுள்ளார்.

வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தடவை 4 ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் இம்முறை 3 ஆசனங்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒரு ஆசனம் வீதமும் தெரிவாகுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பிக்கள் இருவர் இம்முறை தோல்வியடைவார்கள் எனவும், முன்னாள் எம்.பிக்கள் இருவர் தெரிவாவதுடன் சென்ற முறை அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர் ஆகியோருடன் புதிய முகமான இளையவர் ஒருவர் தெரிவாகுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகுவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் புதிய முகமான சிங்களவர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தெரிவாகுவார்எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவாகுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மீண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த முறை அதி கூடிய வாக்கினைப் பெற்றவர் இம்முறையும் அதி கூடிய வாக்குகளுடன் நாடாளுமன்ற உறுப்பினராவதுடன் புதிய இரு முகங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் ஹிஸ்புல்லா அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் ஒருவர் தெரிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்குகளையே வியாழேந்திரன், அருண் தம்பி முத்து, கருணாவின் மனைவி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன பிரிப்பதனால் சவால் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீதத்தில் சரிவை ஏற்படுத்தினாலும் அது பின்னடைவாக அமையாது. காரணம் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் பட்சத்தில்...

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறையும் வழமை போன்று ஐந்து ஆசனங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளதுடன் முன்னாள் எம்.பிக்கள் இருவர் தோல்வியடைவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக கட்சித் தலைமையின் அன்மைய நடவடிக்கையளால் தமிழரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டன் வரையானவர்களிடம் கட்சித் தலைமையின் முற்போக்கான செயற்பாடுகள் மற்றும் கட்சியின் எதிர்காலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள மாற்றம் கட்சித் தலைமை முதல் நிலை வாக்குக்களை பெற வாய்ப்பாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், சிக்கல்கள் இன்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ளும், ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் இக் கட்சிகளில் ஒரு கட்சி நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றால் இரண்டு கட்சிகள் ஐந்து வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழக்கலாம்.

கூட்டமைப்பிற்கு எதிரான கோசத்தை முன்வைக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் மக்களின் அபிமானங்களை முறையாக வெல்லவில்லை என்பதுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தி வாக்குக்களே முதலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு செல்வதுடன் அடுத்த படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தளவான அதிருப்தி வாக்குக்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது எப்படி வாக்குகளை பெற்றாலும் ஒரு ஆசனத்திற்கு மேலதிகமாக ஆசனம் பெறுவது கடினம்.

சந்திரகுமாரின் சுயேச்சைக் குழு ஐந்து வீத வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்யலாம், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கட்சியின் பிளவுகளால் பாரிய பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க முடியாது.

அம்பாறையில் கருணாவின் வரவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பாரிய பின்னடைவுகள் வரலாம் என தேர்தல் ஆரம்பித்த நாட்களில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் கள நிலமைகள் அப்படி அமையாத சூழல் உள்ளதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

காரணம் வழமையாக தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகள் முஸ்லிம் அரசியல்வாதிகளிற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அவை இம்முறை அதிகளவில் இடம்பெற வாய்ப்பில்லை, அத்துடன் 2015ம் ஆண்டு தேர்தலில் தயா கமகேற்கு 11, 500க்கு மேற்பட்ட வாக்குக்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இம் முறை அவர் அம்பாறையில் போட்டியிட வில்லை வழக்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உள்ள வாக்குகளுடன் இணைத்து பத்து வீத வாக்குகளை குறைக்க முயற்சிக்கலாமே தவிர கூட்டமைப்பிற்கு பாரிய அளவில் அது பின்னடைவல்ல...

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தொடர்ச்சியாக ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாவது இல்லை அந்த நிலையை இம்முறையும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதுடன் புதியவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்புக்கள் அதிகளவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக எத்தனை எதிர் பிரசாரங்கள் செய்தாலும் கூட்மைப்பின் வெற்றி வாய்ப்பை இம்முறையும் தட்டிப் பறிக்க முடியாத சூழல் உள்ளமை குறிப்பிடத் தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.