மாவை திட்டமிடப்பட்டே தோற்கடிக்கப்பட்டார்! சுமந்திரனை தூக்கி எறியுங்கள்! மிதுலைச்செல்வி எச்சரிக்கை

Report Print Dias Dias in இலங்கை

“தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு 99 வீதமான காரணம் எம்.ஏ.சுமந்திரன். இதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் வெளியேறிய அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. ” எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உபதலைவி மிதுலைச்செல்வி, மாவை சேனாதிராஜா திட்டமிடப்பட்டு தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளார் எனவும் சாடினார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; எதிர் நடவடிக்கைக்கு தயாராகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தோல்வி அடையக்கூடிய விடயங்களே நடந்தன. அதில் கூட்டமைப்பின் பங்கே அதிகமாக உள்ளது.

அதில் 99 வீதமான பங்கு தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவர்.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன், இந்த வருடத்துக்கான தேர்தலை ஒப்பிடும்போது சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் விருப்பு வாக்குகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் வாக்கு 58 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. இது திட்டமிடப்பட்டு குறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எமது தலைவர் மாவை சேனாதிராஜாவை தோற்கடிப்பதற்காகவே திட்டமிட்டு செயப்பட்டிருப்பது போன்றே தெரிகின்றது.

அதேவேளை, கட்சியின் வாக்குகளின் வீழ்ச்சிக்கும் வேட்பாளர்களின் தோல்விக்கும் முக்கியமான காரணம் எம்.ஏ. சுமந்திரன் என்பது அப்பட்டமான உண்மை.

இவர் தான்றோன்றித்தனமாக கருத்துகளை வெளியிடுவதும், ஊடகப் பேச்சாளர் பதவியைப் பயன்படுத்தி, அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி கட்சியை உடைப்பதற்கான எல்லா வேலைகளும் இவராலே செய்யப்பட்டன.

இதேபோல, உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் இதே விளையாட்டு நடந்திருக்கின்றது.

அந்தத் தேர்தலின் பின்னடைவு குறித்து, தேர்தல் முடிந்த பின்னர் குழுவொன்று அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதில், சுமந்திரன்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனினும் அந்த அறிக்கை வெளியே வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளது.

அவர் எந்தவொரு விடயத்தையும் தனிப்பட்ட முறையில் தெரிவித்து விட்டு, தனது சொந்தக் கருத்தைக் கட்சியின் கருத்து எனத் தெரிவித்து வருகின்றார்.

தற்போது கட்சியை மறுசீரமைக்கவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

தமிழசுக் கட்சி மாத்திரமின்றி தமிழ் மக்களே சிதறி உள்ளமைக்கு சுமந்திரனே காரணம்.

விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், அனந்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரிந்து சென்றமைக்கும் சுமந்திரனின் தனியாக முடிவெடுக்கும் நிலையே காரணமாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சியை விட எமது கட்சி பாரியளவில் வீழ்ச்சியடையக் கூடிய நிலை ஏற்பட்டு விடும். இதுகுறித்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கதைக்க முடியாமல் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

கட்சியின் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் சுமந்திரன் தான் எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிந்தேன். அதேவேளை, கட்சி சின்னாபின்னமானமைக்கான பொறுப்பையும், தமிழ் மக்களின் ஏக்கங்கள் எல்லாமே சிதைக்கப்பட்டதற்கான பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும்.

அத்துடன், மக்கள் அனைத்தையும் இழந்து எதிர்பார்ப்புடன் இருந்தபோது, நல்லாட்சி அரசாங்கம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, அதிலும் ஒன்றும் நடக்காமல் போனது. தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்?

மக்களின் நோக்கம் நிறைவேறாமல் 10 வருடங்களைக் கடந்துகொண்டு செல்கிறது. இது இன்னும் நீண்ட காலமாகப் பிழையாகப் போகப்போகிறதோ என்ற பயத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டியுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். கேள்வி கேட்டாலே வெளியேற்றப்படக்கூடிய கட்டமும் உள்ளது.

கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பதிலை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஊடகப் பேச்சாளருக்குரிய லிமிட் என்ன வென்று அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிடுத்து கட்சியின் எல்லா நடவடிக்கைகளையும் தானே செய்துவிட்டு,தோல்வியடைந்த பின்னர் தலைவர், செயலாளர் மீது தூக்கிப் போடக்கூடாது.

அத்துடன், தலைவரைச் செயற்பட விடாமல் தடுத்து, தானே முடிவெடுத்து செயற்படுத்தியதே சுமந்திரன்தான்.

எல்லா விடயத்திலும் அவர் தலையிட்டுத்தான் இப்படியாகியிருக்கின்றது.

சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றினால் கட்சியைப் புனரமைக்க முடியும். இவரால் வெளியேறியவர்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது.

தேசியப் பட்டியலை பதவியை ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்ற அம்பாறை வேட்பாளர் கலையரசனுக்குக் கொடுத்திருப்பது பொருத்தமானதல்ல.

தற்போதைய தமிழரசுக் கட்சியின் நிலையைக் கருத்திற்கொண்டு மாவை சேனாதிராஜாவுக்குக் கொடுத்திருக்கவேண்டும். அவருக்குக் கொடுக்காத பட்சத்தில் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருப்பதாலும் சசிகலா ரவிராஜூக்குக் கொடுக்கவேண்டும். நான் இதை பிரதேச வாதமாகக் கூறவில்லை. அம்பாறைக்குக் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு வேறொரு வழியைத் தேடலாம்.

தமிழசுக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியைச் சேர்ந்த சித்தார்த்தனும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். எனவே, கூட்டமைப்பின் உறுப்பினர்களை அழைத்துப் பேசி முடிவெடுத்திருக்கவேண்டும். அவசர அவசரமாக தேசியப் பட்டியல் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை.

சசிகலா ரவிராஜ், விருப்பு வாக்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரானால், அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட அவருக்கு பெண் என்ற ரீதியில் எனது ஆதரவு இருக்கும். மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற ரீதியில்தான் பெண்கள் கட்சியில் இணைகிறார்கள். ஆனால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றார்கள். ” என்றார்.

அத்துடன், “கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் கூறிய விடயம் ஒன்று குறித்து தேர்தல் முடிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். இது நடக்குமா என ஊடகரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் ஒரே சட்டம் ஒரே நீதி என்ற ரீதியில் அவர் நடந்து கொள்வார் என நம்புகிறேன். அப்படி நடந்தால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி மீது நம்பிக்கை கொண்டு எமக்கு வாக்களிப்பார்கள். “என்றார்.