இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்

Report Print Steephen Steephen in இலங்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன், பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இவர்களை தவிர பிரதமரின் மூத்த புதல்வர் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சராகவும் உள்நாட்டு பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இவரது புதல்வரும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச நெல், தானிய வகைகள், இயற்கை பசளை உணவு, காய்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி, உயர் தொழிற்நுடப கமத்தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் என அரசியல் அவதானிகளால் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் அவரது தாயும், முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பதவி வகித்துள்ளார்.

சந்திரிக்காவின் சகோதரர் அனுர பண்டாரநாயக்க அமைச்சராக பதவி வகித்தார்.

அதேவேளை இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் புதல்வர் டட்லி சேனாநாயக்க அன்றைய அரசாங்கத்தில் கமத்தொழில் துறை அமைச்சராக பதவி வகித்ததுடன் டி.எஸ் சேனாநாயக்கவின் மறைக்கு பின்னர் மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளதுடன் அவரது சகோதரர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை.

அவரது உறவினரான ருவான் விஜேவர்தன மாத்திரமே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.