ஐ.தே.க கட்சியின் பிரதித் தலைவர் நாளை நியமனம்?

Report Print Dias Dias in இலங்கை
131Shares

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரை தெரிவு செய்வதற்காக நாளை திங்கட்கிழமை 14 ஆம் திகதி செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் காலை 9மணிக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதோடு கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தொடர்பிலும் தீர்க்கமான தீர்மானம் ஒன்றை நோக்கி விவாதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவராகவுமுள்ள சஜித் பிரேமதாசஸ விலகியமையை தொடர்ந்து அப்பதவிக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட எண்மரில் ஒருவரை பிரதி தலைவர் பதவிக்காக தெரிவு செய்யவுள்ளதாகவும் பிரதி தலைவரின் பதவிக்காக வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பின் மூலம் பிரதி தலைவர் செய்யப்படுவாரெனவும் கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.