சஹ்ரான் ஹாசிமை கைது செய்வதற்கான காரணங்கள் இருந்தும் குற்றப்புலனாய்வுத்துறை தவறிழைத்துவிட்டது

Report Print Ajith Ajith in இலங்கை
71Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கியதாரி சஹ்ரான் ஹாசிமை கைது செய்வதற்கான காரணங்கள் பாதுகாப்பு மீளாய்வு கூட்டங்களின் போது முன்வைக்கப்பட்டிருந்த போதும் அவரை கைது செய்ய பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத்துறையும் தவறிவிட்டதாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளித்த தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானின் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஏற்கனவே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவரை கைது செய்வது குறித்து பொலிஸார் மா அதிபரே அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் கலந்துரையாடியிருக்க வேண்டும். எனினும் அது இடம்பெறவில்லை என்று சிசிர மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சஹ்ரான் ஹாசிம் தமது அலுவலகத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய நல்லாட்சிக்கான அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் காணொளி காட்சி ஆணைக்குழுவில் காட்டப்பட்டுள்ளது.

இதன்போது தமிழில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஆணைக்குழுவின் முன் கூறப்பட்டுள்ளன.

கிழக்கின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவூதியில் இருந்து 1 மில்லியன் ரியாலை பெற்றுள்ளதாகவும், அதனை அவர் அரசியலுக்கு பயன்படுத்துவதில் பிரச்சினையில்லை என்று சஹ்ரான் தெரிவித்தது காணொளியில் பதிவாகியிருந்தது.

அத்துடன் சவூதியின் ஹிரா நிதியத்தில் இருந்து நிதியுதவி குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது 2012 - 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்த சஹ்ரான் அறிக்கை ஒன்றை முன்வைப்பதும் காணொளியில் அடங்கியுள்ளது.