இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து நம்பிக்கையில்லை! ஐ.நா இணைக்குழு

Report Print Kamel Kamel in இலங்கை

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து நம்பிக்கையில்லை என இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மொன்டன் ஜெனரோ மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இந்த இணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டமை ஏமாற்றமளிப்பதாகவும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய நல்லிணக்க பொறிமுறைமை ஒன்று தொடர்பில் இலங்கையின் முனைப்புக்களில் நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குற்றச்செயல்களுக்கான பொறுப்பு கூறுதல் போன்றன தொடர்பிலான நிலைமைகள் குறித்து எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் காத்திரமான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படாத நிலையில் புதிய அணுகுமுறையின் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியுமா என்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள், காணாமல்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உள்ளிட்டன மிகவும் முக்கியமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென இந்த இணைக்குழு கோரியுள்ளது.