13 வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு

Report Print Sethu Sethu in இலங்கை

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என செங்கலடி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அரசின் பங்காளி கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உட்பட்ட செங்கலடி பிரதேச சபையின் இன்றைய அமர்வில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் நாகமணி கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற செங்கலடி பிரதேச சபையின் இன்றைய(17) அமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ந.திருநாவுக்கரசு அவர்களினால் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட விசேட கலந்துரையாடலின் போது சபையில் எந்த வித எதிர்ப்பும் இன்றி 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கொண்டுவரப்பட உள்ள புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் பொது ஜன பெறமுன அரசின் பங்காளி கட்சிகளான உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக பிரேரணையினை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 13 வது திருத்தச் சட்டத்தில் கை வைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அது குறித்த பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை வெற்றி பெற செய்துள்ளார்.