இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பல் தலைவரிடம் 170 மில்லியன் ரூபா கோரும் இலங்கை

Report Print Dias Dias in இலங்கை

இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டிக்கு அப்பால் கடலில் தீப்பற்றிக் கொண்ட நியூ டயமண்ட் கப்பலின் தலைவர் திரோஸ் இலியாஸை செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக கடல் சுற்றாடல் சட்டத்தின் கீழ், நீதிமன்றில் விளக்கமளிப்பதற்காக நியூ டயமண்ட கப்பலின் தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான, அழைப்பாணையை பெறுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கிரேக்க நாட்டவரான திரோஸ் இலியாஸ் எனும் குறித்த கப்பலின் தலைவர், காலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னணியிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 340 மில்லியன் ரூபாய் (ரூ. 34 கோடி) நஷ்ட ஈடாக செலுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரோவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கப்பல் அதன் தற்போதைய இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமானால், 170 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்பிலிட்டு கப்பலை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கப்டன் தற்போது காலியில் தனிமைப்படுத்தலில் உள்ளார் என்றும் அவரது தனிமைப்படுத்தல் இந்த மாதம் 24 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் கூறினார்.