இலங்கையில் தற்போது பிச்சை எடுப்பது ஒரு தொழிலாக மாறி வருகின்றது. பிச்சை எடுக்கும் ஒருவர் ஒருநாளில் இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபா சம்பாதிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக உணவுக்காக பிச்சை எடுத்தல் என்பதைத் தாண்டி திட்டமிட்டு பிச்சை எடுக்கும் போக்கு இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக கொழும்பில் பிச்சை எடுத்தல் ஒரு தொழிலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பின், பிரதான வர்த்தக நகரகங்களான செட்டித்தெரு மற்றும் பிரதான வீதி போன்ற பகுதிகளில் பெண்கள், ஆண்கள் மாத்திரமின்றி சிறார்களும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செட்டியார்த் தெருவில் சுமார் 1500இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பதற்கென 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, இரண்டு ரூபா நாணயக் குற்றிகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.
வர்த்தக நிலையங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டதுடன் பிச்சைக்காரர்கள் இங்குள்ள சுமார் 1500இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்குச் சென்று முற்றுகையிடுகின்றனர்.
“ இலங்கையில் தற்போது பிச்சைக்காரர்கள் ஒரு சமூகப் பிரச்சினையாக உருமாறி வருகின்றனர். செட்டித்தெருவில் உள்ள சுமார் 2000 கடைகளிலும் யாசகம் பெறுகின்றனர்.
ஒருநாளில் நாங்கள் சம்பாதிப்பதை விட யாசகம் பெறுபவர்கள் சம்பாதிக்கின்றனர். யாசகர்களுக்கு கொடுப்பதற்காகவே ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 600 ரூபா வரை நாங்கள் செலவு செய்கின்றோம்.
ஒருசிலர் இரண்டு ரூபாய் கொடுத்தால் வாங்குவார்கள், ஆனால் மற்றும் சிலர் அதனை வீசிவிட்டும் செல்வார்கள்” என கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிச்சைக்காரர்களுக்காகவே நாளொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது வழக்கமாகிவிட்டதாகவும் அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை விடவும் அதிக வருமானத்தை பிச்சைக்காரர்கள் பெற்று வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.