இலங்கை அரசிற்கு எதிராக யாழில் ஓரணியில் தமிழ் கட்சிகள்

Report Print Dias Dias in இலங்கை
1091Shares

புதிய இணைப்பு..

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை தடுக்கும் அடக்குமுறை செயற்பாட்டை கைவிடும்படி தமிழ் கட்சிகள் ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டாக கோரிக்கை விடுவதென தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கும் விதமாக அஞ்சலிக்கும் உரிமைகளை தடுப்பதை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய தமிழ் கட்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடின.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகள், ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை தடுக்கும் விதமாக அரசாங்கம் அஞ்சலி தடையை விதித்துள்ளதாகவும், இது ஐ.நாவில் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அன்னை பூபதி, மாவீரர் நாளுக்கும் இந்த தடை தொடருமென்பதால், இதை அனுமதிக்க முடியாது, அடிப்படை உரிமைகளை மீளப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

இறந்தவர்களை அஞ்சலிக்கவும், கௌரவிக்கவும் உள்ள தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும்படி உடனடியாக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் மூலம் கோருவதென தீரமானிக்கப்பட்டது.

உடனடியாக இந்த கடிதத்தை அனுப்பவதென்றும், அதற்கு அவர்களின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அரசுக்கு எதிரான ஜனநாயக வழி போராட்டங்களை அறிவிக்க வேண்டுமென பலரும் வலியுறுத்திய போதும், முதலில் அரசுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக, ஒரு கடிதத்தை அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்திற்கு அரச தரப்பின் பதிலை பொறுத்து, மீள சந்தித்து அடுத்து கட்டம் தீர்மானிப்பதென முடிவானது.

முதலாம் இணைப்பு..

இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக, மக்கள் மனித உரிமை மீறப்படும் செயற்பாடுகளை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருகின்றனர்.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் இளங்கலைஞர் மண்டபத்தில் விசேட கூட்டம் நடைபெற்று வருகின்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இலங்கை அரசால் மனித உரிமை மற்றும் மக்களின் ஜனநாயக செயற்பாட்டிற்கு அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் விரிவாக ஆராயப்படவுள்ளது.