நாட்டிற்கு வெளியில் இருந்து இயக்கும் கட்டமைப்பை ஏற்க போவதில்லை! இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக இலங்கைக்கு வெளியில் இருந்து இயக்கும் கட்டமைப்பை ஏற்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உண்மையான நல்லிணக்கத்துக்காக நான்கரை வருடங்களாக வெளி கட்டமைப்பின் மூலம் எவ்வித நன்மையையும் பெற முடியவில்லை.

எனவே வெளியில் இருந்துஇயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர்வதற்கு பதிலாக, இலங்கையின் நலனுக்காக, மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45ஆவதுஅமர்வில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை மேம்படுத்துவது குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

தனி மற்றும் கூட்டு உரிமைகளை மேம்படுத்துவது, நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வது மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்ட 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.