இலங்கையின் முடிவுகள் பிரித்தானியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது - மெத்தியூ பேர்மன்

Report Print Steephen Steephen in இலங்கை

இலங்கை தொடர்பான செய்திகள், இடைக்கால நீதி வழங்குவது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசகர் மெத்தியூ பேர்மன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் அவர் இதனை கூறியுள்ளார்.

விசேட பிரதிநிதி செல்வியோலியின் அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கை சம்பந்தமாக கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

டி கிறீப்பின் அறிக்கை மற்றும் அவரது பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த விடயத்தை பின்தொடர்ந்து முன்னெடுப்பதில் நீங்கள் காட்டிய ஆர்வத்தையும் வரவேற்கின்றோம்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதியை வழங்குவது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் போன்ற உள்நாட்டு பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்படுவதை நாங்கள் வரவேற்றோம். 30/1 யோசனைக்கு வழங்கிய அனுசரணையில் இருந்து விலகுவது என இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு பிரித்தானியாவுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

30/1 யோசனையானது உண்மை மற்றும் நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரு பலமான கட்டமைப்பு என நாங்கள் நம்புகிறோம்.

நிலையான நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்கு அர்த்தமுள்ள இடைக்கால நீதி வழங்கல் என்பது முக்கியமானது. இலங்கையின் கடந்தகால உள்நாட்டு பொறிமுறைகள் அர்த்தமுள்ள நீதியையும் பொறுப்புக் கூறலையும் வழங்க தவறின என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை உள்ளடக்கிய விடயங்களில் முன்னேற்றங்கள் இல்லாமல் இருப்பது தொடர்பாக நாங்கள் எமது கவலைகளை பகிர்ந்துக்கொள்கிறோம்.

பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற தொடர்ச்சியான சம்பவங்களை கவனத்தில் கொண்டு, இடைக்கால நீதியை பெற்றுக்கொள்ள போராடி வரும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அழுத்தங்களை கவலையுடன் அவதானித்து வருகின்றோம்.

இந்த செய்திகள் இடைக்கால நீதியை வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாகியுள்ளன.

டி கிறீப்பின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து விரிவாக கவனம் செலுத்துமாறு பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. அத்துடன் இலங்கை தொடர்பான இந்த பிரச்சினைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரித்தானிய தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் மெத்தியூ பேர்மன் குறிப்பிட்டுள்ளார்.