தியாகி திலீபனின் விடயத்தில் இழைக்கப்பட்டது அநீதி! நாடாளுமன்றில் அநுரகுமார எச்சரிக்கை

Report Print Dias Dias in இலங்கை

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27/2 கீழ் விசேட கூற்றை என்னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன்.

ஏனெனில் இதில் மூன்றாம் பந்தியில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 (எப்)இக்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது.

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சபையில் முன்வைத்தார். இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27/2 கீழ் விசேட கூற்றை என்னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன் என்றார்.

திலீபன் தொடர்பாக மூன்றாம் பந்தியில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 (எப்)இக்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல நாடாளுமன்ற நடைமுறை நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சகல கட்சி தலைவர்களும் நிலையியல் கட்டளை 27/2 இக்கு அமைய ஒரு நாளில் ஒரேயொரு சமூக, அவசரகால அல்லது முக்கியத்துவம் என கருதும் கேள்வியை மாத்திரமே கொண்டுவர முடியும் என்ற வரையறையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற அறிவிப்பை அறியத்தருகின்றேன் எனக் கூறி நிராகரித்தார்.

இதன்போது நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நீங்கள் விடுத்த அறிவிப்பு தொடர்பில் எமக்கு உடன்பாடுகள் இல்லை.

நாம் நீண்ட காலமாக நாடாளுமன்ற பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளோம். கட்சி தலைவர் ஒருவருக்கு விசேட கேள்விகளை எழுப்பும் வாய்ப்பு இதுவரை காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.

சபையில் இருக்கும் பிரதமரும் இதனை ஏற்றுக்கொள்வார். குறிப்பாக நிலையியற்கட்டளைக்கு அமைய இந்த உரிமை கட்சி தலைவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் எமக்குள்ள இந்த உரிமையை எம்முடன் எந்தவித கலந்துரையாடலும் இல்லாது, குறைந்த பட்சம் கட்சி தலைவர்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு எந்தவொரு செயற்படும் இல்லாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதை அடுத்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். ஆளும் கட்சியினர் வலது பக்கம் அமர்ந்துள்ளனர், எதிர்க்கட்சியினர் இடதுபக்கம் அமர்கின்றனர்.

சபாநாயகர் ஆசனம் இரண்டு தரப்பிற்கும் நடுவில் உள்ளது. ஆனால் சபாநாயகர் நீங்களோ வலது பக்கம் சாய்ந்தே அமர்ந்துள்ளீர்கள்.

இந்த கலாசாரத்தை நீங்கள் நிறுத்துங்கள். கட்சி தலைவர் ஒருவருக்கு உள்ள உரிமையை நீங்கள் தட்டிப்பறிக்க வேண்டாம். ஒன்பதாவது நாடாளுமன்றம் கூடி மூன்று அமர்வுகள் முடிந்துள்ளது, இதுவரையில் நான் 27/2 இன் கீழ் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை.

அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை என்பதற்காக எனக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தப்படாது. நாம் கேட்காது இருப்பது என்பதும் எமக்குள்ள உரிமை என்பதும் வெவ்வேறு காரணிகள்.

எனவே கட்சி தலைவர்களிடம் இது குறித்து தெரிவிக்காது சர்வாதிகாரமாக செயற்பட வேண்டாம். நாளை கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து பேசலாம் என கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளும் தரப்பில் தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டிலான் பெரேரா உள்ளிட்டவர்கள் கஜேந்திரகுமாரின் கேள்விக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்து சபையை பிழையாக வழிநடத்துகிறார் என்பதை கஜேந்திரகுமாரும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கட்சித்தலைவரான கஜேந்திரகுமாரின் கேள்வியை நாடாளுமன்றத்தில் அனுமதிக்காத சபாநாயகர், டக்ளஸ் தேவானந்தா தினமும் அடிக்கடி கட்சித் தலைவர் என்ற கோதாவில் குறுக்கீடு செய்வதை அனுமதிப்பதையும் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் வெளிப்படையாக அரச தரப்பை சார்ந்து செயற்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.