தியாகி திலீபனை நினைவுகூர தமிழர்களிற்கு உரிமையுண்டு : நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

Report Print Dias Dias in இலங்கை
700Shares

நிதி ஆணைக்குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும் போது மாகாண சபைக்கு உரியதான சில விடயங்கள் உங்கள் யாவரதும் கவனத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டியுள்ளது.

அரசியல் யாப்பின் உறுப்புரை 154 R(3)ன் கீழ் மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நிதி மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நான் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது எமது கணிப்பின் அடிப்படையில் 12000 மில்லியன் ரூபாய் நிதி 2014ம் ஆண்டு மாகாண செலவுகளுக்காக வேண்டியிருந்தது.

எவற்றிற்காக அந்தப் பணம் தேவையாக இருந்தது என்பது பற்றி நாம் விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் எமக்குக் கிடைத்ததோ கிட்டத்தட்ட 1650 மில்லியன் ரூபாய் மட்டுமே. அந்தத் தொகையை மிகக் கவனமாக நாம் ஒரு சதமேனும் வீணாக்காது செலவு செய்தோம்.

ஆனால் அதே பாதீட்டின் மூலம் அரசாங்கம் சுமார் பத்தாயிரம் மில்லியன் ரூபாய் பணத்தை வெவ்வேறு மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கியிருந்தது.

அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டு பலவித தடைகளைத் தாண்டி வடமாகாண அரசாங்க அதிபருக்கு அந்த நிதி வந்த போது வருடத்தின் பாதிக் காலத்திற்கு மேல் முடிந்திருந்தது. அரசாங்க அதிபர்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் அந்தப் பணத்தை மக்கள் சார்பாக நேரம்மின்மையால் பாவிக்க முடியாததன் காரணமாக பெரும்பான்மைப் பணம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் எமக்குத் தரப்பட்ட 1650 மில்லியன் பணமோ உரியவாறு ஒரு சதம் மிச்சமில்லாமல் செலவு செய்யப்பட்டது.

அவ்வாறு சிறந்த முறையில் நிதி நிர்வாகம் நடந்ததால்த் தான் 2016ம் ஆண்டில் நாட்டின் 850க்கும் மேலான அமைச்சுக்கள், திணைக்களங்கள் அனைத்தினுள்ளும் முதலாவதாக எமது வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகவே பணத்தைத் திருப்பி அனுப்பியவர்கள் மாவட்ட செயலர்களேயன்றி நாமல்ல.

முதலாவது எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால், இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன. அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ நான் அறியேன்.

அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார்.

உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா?

இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே?

மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதைத் தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.