தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய மைத்திரி நேரம் தரவில்லை: ஹேமசிறி பெர்னாண்டோ

Report Print Ajith Ajith in இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் ஏப்ரல் 21, 2019 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அறிந்திருந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாதபோது பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கத் தவறியதும் பயங்கரவாத தாக்குதல்களைத் தவிர்க்க முடியாத காரணங்களில் ஒன்றாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

தாம், பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில், சிறிசேன வெளிநாடுகளுக்குச் சென்றபோது ஒருபோதும் ஒரு பாதுகாப்பு அமைச்சரை நியமிக்கவில்லை என்று பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முன்னைய ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் இல்லாதபோது தமது ஒப்புதல் இல்லாமல் எதிர்ப்பு பேரணிகளை கலைக்க தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மைத்திரிபால கண்டிப்பாக அறிவுறுத்தியதாக ஹேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய தமக்கு போதுமான நேரத்தை மைத்திரிபால கொடுக்கவில்லை என்றும் இது பாதுகாப்பு விடயங்களை பாதித்தது என்றும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டங்களை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட வழக்கம் மைத்திரிபால சிறிசேனவிடம் இல்லை, கூட்டங்களுக்கு முதல் நாளில் மாத்திரமே சிறிசேன, அரசியல் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களை கூட்டத்திற்கு அழைக்குமாறு தமக்கு உத்தரவிட்டு வந்தார் என்று சாட்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஹ்ரான் ஹாஷிமை கைது செய்ய முன்னாள் ஜனாதிபதி ஒருபோதும் அவருக்கு எந்த அறிவுறுத்தலையும் கொடுக்கவில்லை என்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ளார்.