இந்திய எல்லையில் வைத்து மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

Report Print Ashik in இலங்கை

இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் தமிழக கடலோர கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே அதி நவீன ரோந்து படகுகளில் சென்ற இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் 15 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்றவர்கள் பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2ஆம் திகதி தொடக்கம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் வானிலை மைய எச்சரிக்கை, உள்ளிட்ட காரணங்களால் 15 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.

இந்தநிலையில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்த நேற்று மீன் வளத்துறையிடம் மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றிரவு கச்சத்தீவுக்கும் - தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஐந்திற்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 50 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாமல் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வீசி விட்டு கரை திரும்பியுள்ளனர்.

இதனால் படகு ஒன்றுக்கு 40ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவத்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் மீனவர் பிரச்சினையில் கவனம் செலுத்தி இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழக மீனவர்கள் நடுக் கடலில் இலங்கை கடற்படை பிரச்சினைகள் இல்லாமல் மீன்பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் நடுக்கடலில் இலங்கை கடற்படை விரட்டி அடித்த சம்பவம் தமிழக கடலோர கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.