கொரோனாவின் 3ஆவது அலையையும் வெற்றிகரமாக அரசு எதிர்கொள்ளும்! ரமேஷ் பத்திரண நம்பிக்கை

Report Print Rakesh in இலங்கை

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் மூன்றாவது அலையையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்று செயற்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பொருளாதார ரீதியான பாதுகாப்பையும் அரசு முறையாக முன்னெடுத்து வருகின்றது.

எதிர்க்கட்சியினர் எத்தகைய கருத்துக்களை தெரிவித்தாலும் அரசு அதனை வைத்து அரசியல் நடத்தவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பில் மருத்துவத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலங்களில் பல கொரோனா வைரஸ் கொத்தணிகளை நாம் முகாமைத்துவம் செய்துள்ளோம். நாட்டில் தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் மூன்றாவது அலையையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

பல்வேறு பிரதேசங்களில் இணை கொத்தணிகள் உருவாகி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பாக சுகாதார வழிமுறைகளையே வாழ்க்கையாக்கிக் கொண்டால் சிறந்தது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் இலங்கையில் இதுவரை 6 - 7 ஆயிரம் பேரே நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகில் மிகக் குறைந்த வைரஸ் தொற்று நோயாளிகளைக் கொண்ட நாடு எமது நாடாகும். அரசில் அர்ப்பணிப்புடனான நடவடிக்கைகளே அதற்கு முக்கிய காரணம்.

ஜனாதிபதியும் சுகாதார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இதுவரை 4 இலட்சத்து 27 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 26 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் புதிய தனிமைப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மிக உயர் மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.